கடந்த பிப்ரவரி மாதம் ரூ.1.13 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக ரூ.1,13,143 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.21,092 கோடியும், மாநில வரியாக ரூ.27,273 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியின் கீழ் இறக்குமதிக்கான ரூ.24,382 கோடி உட்பட மொத்தம் ரூ.55,253 கோடி கிடைத்துள்ளது. செஸ் வரியாக ரூ.9,525 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 7% அதிகம். 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.1,05,361 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் 2021 பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு 2020 பிப்ரவரி மாதம் ரூ.6,426 கோடி ஜிஎஸ்டி வசூலானது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.158.86 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு ரூ.158.05 கோடியாக 1% குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முடங்கிப்போன தொழில்துறைகளை ஊக்குவிக்க அரசு எடுத்த பல்வேறு கட்ட ஊக்குவிப்பு சலுகைகள் மூலம் நிலைமை படிப்படியாக மீண்டு வருவதை ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு உணர்த்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,