வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள்: வரவேற்கத்தக்கது!

public

தமிழகத்தில் காய்கறிகளைப் போன்று, மளிகைப் பொருள்களும் வாகனங்களில் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (மே 31) காலை 6 மணி முதல் ஜூன்7ஆம் தேதி காலை 7 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டதுடன், சில தளர்வுகளையும் அளித்துள்ளது தமிழக அரசு.

முன்னதாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நடமாடும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மளிகைப் பொருட்களையும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர்கள் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சியின் அனுமதியுடன் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன், தொலைபேசி வாயிலாக மக்கள், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை, காய்கறி, பழங்களை வாங்கிக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மளிகைப்பொருட்களை கொள்முதல் செய்து குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு உரிய அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த பணியில் ஈடுபட இருக்கும் ஊழியர்களுக்கு அனுமதிச்சீட்டு நேற்று வழங்கப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சில்லறை வணிக வியாபாரிகள் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மளிகை பொருட்களை வாங்கி, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தள்ளு வண்டிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

அதன்படி, இன்று காலை முதல் காய்கறி, பழங்களுடன் மளிகை பொருட்களும் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன், தொலைபேசி வாயிலாக மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி [இணையதளம்](http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

‘சென்னையில் 2,197 வாகனங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனைத் தொடங்கியுள்ளது. சென்னையில் 7,000 வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

”வீடு தேடி வரும் மளிகை பொருட்கள் திட்டம் வரவேற்கத்தக்கது. கொரோனா காலத்தில் எங்கேயும் அலைந்து திரியாமல் வீட்டிற்கே பொருட்களை கொண்டு வந்து கொடுப்பது நல்ல விஷயம். வாகனங்களில் வரும் பொருட்கள் அதிக விலை இல்லாமல், நியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஊரடங்கு முடியும் வரை இதுபோன்று வீடுகளுக்கு வந்து பொருட்களை வழங்கினால் நன்றாக இருக்கும்” என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

’கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.