ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் மேம்படுத்தி வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரக்கால தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்த மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து கோவிஷீல்டு மருந்தின் கூடுதல் தரவுகளைக் கேட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாமா என்று வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. நேற்று காலை தொடங்கி மாலை வரை நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, இம்மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.
இதையடுத்து மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் கோவிஷீல்டு அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் அனுமதித்தது போல 4 முதல் 12 வாரங்களில் 2 டோஸ்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் இம்மருந்துக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல், இந்தியாவில் இரண்டாம் கட்டமாக 100 தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசி செலுத்திப் பெறப்பட்ட தரவுகள், தன்னார்வலர்களில் உருவாகும் ஆன்டிபாடி அளவுகள் மற்றும் முதல் கட்ட ஆய்வுகளின் பாதுகாப்புத் தரவு ஆகியவற்றின் அடிப்படையில் அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்திற்குள் 100 மில்லியன் டோஸ் கையிருப்பு இருக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் இன்று தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒத்திகை நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 11 இடங்களில் நடைபெறும் என்று நேற்று தகவல் வெளியான நிலையில் 17 இடங்களில் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல் படியும், முதலமைச்சரின் ஆலோசனைப்படியும் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெறும் என்று கூறியுள்ள அவர், “ கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 47,500 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2,170 சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசியைப் போட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**�,”