கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பட்டாணி கோதுமை பரோட்டா

Published On:

| By Balaji

டிபன் வகைகளில் பரோட்டா தனிச்சுவை மிக்கது. சிறுவர் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான இரவு உணவு. பொதுவாக, பரோட்டா சாப்பிட வேண்டுமென்றால் கடைகளுக்குத்தான் சென்று சாப்பிட வேண்டியிருக்கும்.

மைதாவில் செய்வதால் பரோட்டா ஆரோக்கியமற்ற உணவு என்ற பிரச்சாரம் ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அதெல்லாம் பரோட்டா பிரியர்களுக்கு பொருட்டே இல்லை. அந்த வகையில் மைதாவுக்கு மாற்றாக விதவிதமான கோதுமை பரோட்டாக்களை வீட்டிலேயே செய்து அசத்தலாம். அதற்கு இந்தப் பச்சைப்பட்டாணி கோதுமை பரோட்டா பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

கோதுமை மாவு – ஒரு கப்

பச்சைப்பட்டாணி – ஒரு கப்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பச்சைப்பட்டாணியைத் தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஒன்றிரண்டாகப் பிசிறிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி வேகவைத்த பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தழை, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து புரட்டி இறக்கி ஆறவைக்கவும்.

பிசைந்துவைத்த கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டித் தட்டி, அதில் பட்டாணிக்கலவையை வைத்து மூடி, வட்ட வடிவில் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

நேற்றைய ஸ்பெஷல்: WFH… உங்களுக்கான டயட் இது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share