kகிராம சபைக் கூட்டம் ரத்தில் உள்நோக்கமா?

Published On:

| By Balaji

நாளை நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்திருத்தம் 73 ன் கீழ்1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி,ஒவ்வொரு ஆண்டும் கிராமசபைக் கூட்டங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் கூட்ட வேண்டும். கிராம சபைக்கு கூட்டங்கள், கிராம மக்களது கோரிக்கைகளை,பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. அத்துடன் ஊராட்சி செலவினம், திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை நடைபெறும். இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26, தொழிலாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்டு 15 மற்றும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டப்படுகிறது. நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், கொரோனா சூழல் காரணமாக கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் தமிழக கிராமப்புற மேம்பாடு மற்றும் ஊராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பாதிப்பு ஏற்படலாம். இதனைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்துசெய்யப்படுகிறது. ஆகவே, கிராம சபைக் கூட்டத்தை ரத்துசெய்ய ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடக்கும் போது தான் கிராமத்தில் என்ன பணிகள் நடக்கிறது என்றும், ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சாமானிய கிராம மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். ஊராட்சிகளில் நடக்கின்ற தரமில்லாத பணிகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கவும் வாய்ப்பாக அமையும். கடந்த கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை மக்கள் தெரிந்து கொள்ள முடிந்தது” எனச் சுட்டிக்காட்டினார்.

கிராம மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த கிராமசபை கூட்டங்களை தனிமனித இடைவெளியுடன் நடத்துவதற்கு அனுமதித்திருக்க வேண்டும் என்ற அவர், “முதலமைச்சர் மாவட்டங்களுக்கு ஆய்வு கூட்டத்திற்காக செல்லும் போது மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்க திரட்டுகின்ற கூட்டத்தால் கொரோனா பரவாதா ?அமைச்சர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கூட்டி கூட்டங்கள் நடத்தும் போது கொரோனா பரவாதா ? டாஸ்மாக்கை திறந்துவிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கூடும் போது கொரோனா பரவாதா ?.” என கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

மேலும், “கொரோனா பரவல் என்ற காரணத்தை காட்டி சாதாரண மக்களுடைய கேள்விகளிலிருந்து அரசு தப்பிக்க பார்க்கிறது. கிராம ஊராட்சிகளில் எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்கள் தலைவர்களாக இருந்தாலும் ஆளுங்கட்சியினருடைய தலையீடு அதிகமாக இருக்கின்றது. அதை பற்றிய புகார்கள் தமிழகம் பூராவும் குவிந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிராமசபை கூட்டங்களை தவிர்த்திருப்பது ஆட்சியாளர்கள் உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாகவே புரிகிறது” என்றும் குற்றம்சாட்டியுள்ளார் ஈஸ்வரன்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share