தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.
முன்னதாக ’காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது. என் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையைத் தமிழ்நாட்டில் இல்லாமல் வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும். எனக்கு எதிரான வழக்கின் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இவரது கோரிக்கையை நிராகரித்தது.
இந்நிலையில் மீண்டும் ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “தன் மீதான பாலியல் வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகார வரம்பில் இல்லாத விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகின்றது. அதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை அரசு தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ள நிலையில் ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
**-வினிதா**
�,