காங்கிரஸ் ரூ.4,000, என்.ஆர்.காங்கிரஸ் ரூ1,000: இது புதுச்சேரி நிலவரம்!

Published On:

| By Balaji

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுடன் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிக்கும் நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம், மக்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான் குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக புவனா (எ) புவனேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜான் குமாருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அத்துடன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் தொகுதி முழுக்க பலமாக வலம்வந்தனர். பணத்துக்குப் பஞ்சமில்லாமல் நகர்ந்திருக்கிறது காங்கிரஸின் பிரச்சாரம். இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கு ஈடுகொடுக்க முடியாமல் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் போராடியிருக்கிறார்கள்.

தொகுதிக்குள் காங்கிரஸ் தரப்பிலிருந்து வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், காங்கிரஸ் பலவீமனமாக இருக்கும் பகுதிகளில் ரூ.4 ஆயிரமும் எனத் தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி நெருங்கிவரும் நிலையில், வீட்டுக்கு வீடு கிஃப்ட் பாக்ஸ் கொடுக்கவும் பட்டியல் தயாராகி வருகிறதாம். என்.ஆர்.காங்கிரஸ் தரப்பிலிருந்து வீடு வீடாகச் சென்று ஓட்டுக்கு ரூ.1,000 என வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே காங்கிரஸார் அளித்த தொகையையும், பரிசுப் பொருள் செய்தியையும் கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறார்களாம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர்.

தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் தெம்புடன் வலம்வந்து கொண்டிருக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரின் நடைதான் சற்று தளர்ந்துபோனது போல உள்ளதாகக் கூறுகிறார்கள் தொகுதி வாக்காளர்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share