சுங்கக் கட்டணத்தை ஏன் பாதியாகக் குறைக்கக் கூடாது?

Published On:

| By Balaji

மதுரவாயல் முதல் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்கும் வரை ஏன் சுங்கக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சத்தியநாராயணன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், சென்னை மதுரவாயல் முதல் வேலூர் வாலாஜாபாத் வரை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதை முறையாகப் பராமரிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை நேற்று (நவம்பர் 28) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, சாலை பராமரிப்பு தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்துத் துறை, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அப்போது, மதுரவாயல் முதல் வாலாஜாபாத் வரை சரியாகச் சாலையை அமைக்கும் வரை அந்தப் பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணத்தை ஏன் 50 சதவிகிதமாகக் குறைக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் சென்னையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலையும் மோசமாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தரமான சாலைகள் வேண்டுமானால் சுங்கக் கட்டணத்தை அவசியம் செலுத்த வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share