உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடும் பதவிகள் எவை என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் கடந்த மாதம் ஆரம்பித்தது. வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலமாகவும், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு வாக்குச் சீட்டு முறையிலும் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற தேர்தலில் கட்சி அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
**ஊராட்சித் தேர்தலில் கட்சி சின்னம் கிடையாது**
இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பாணையில், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் பதவிகளுக்கு சுயேச்சை சின்னங்களில் போட்டியிடலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய கால அவகாசம் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 30 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இன்னும் சில வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,”