சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார் என்றும், அடுத்த 20 நாட்களில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் என்றும் என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தும், மூன்று கட்சிகளால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக காங்கிரஸ் – என்சிபி – சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கும் வரைவு நேற்று(நவம்பர் 14) தயாரானது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று(நவம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி விரைவில் அமையும். இந்தக் கூட்டணி ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். எங்களின் கூட்டணி அரசு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும். இது குறித்த முக்கிய ஆலோசனை நேற்று நடைபெற்றது.
எங்கள் கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டம் அடிப்படையில் செயலாற்றி வருகிறது. மாநிலத்தில் அரசு எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு வழிகாட்டும். மாநிலத்தில் இடைத்தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் வராது. எங்கள் கூட்டணி 6 மாதங்கள் வரை நீடிக்காது என்று பட்னாவிஸ் பேசியுள்ளார். எனக்கு பட்னாவிஸை முதல்வராகத் தெரியும். ஆனால், ஜோதிடராக எனக்குத் தெரியாது” எனக் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக், அடுத்த 20 நாட்களில் மகாராஷ்டிராவில் அரசு அமையும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, முதல்வர் பதவி தொடர்பாக சில முரண்பட்ட கருத்துக்கள் நிலவியது என தகவல்கள் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, முதலமைச்சர் சிவசேனாவிலிருந்து தான் வருவார். சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான பிளவு முதல்வர் பதவியினால் தான் ஏற்பட்டது. எனவே நாங்கள் முதல்வர் பதவி தொடர்பாக போட்டியிடப் போவதில்லை”, என்றார் நவாப் மாலிக்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நாளை சந்திக்க முடிவு செய்துள்ளனர். விவசாயிகள் பிரச்சனை குறித்து இச்சந்திப்பில் பேசவுள்ளதாக நவாப் மாலிக் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், ஆட்சியமைக்க மூன்று கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
�,”