தமிழகத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கோரும் உணவகங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் நீண்ட தூர பேருந்துகள், உணவு இடைவெளிக்காக நிறுத்தப்படும் உணவகங்களில், உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், அதனால் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரமற்ற உணவகங்களில் நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டதுடன், எந்தெந்த உணவகங்களில் உணவு இடைவெளிக்காக நிற்க வேண்டும் என்ற பட்டியலையும் வெளியிட்டது.
இந்த நிலையில், நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள், தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஓர் ஆண்டுக்கு உரிமம் வழங்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி படிவத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 27ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் உணவகங்களுக்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.
கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்.
பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுநருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.
உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்கிரீட் தளமாக அல்லது பேவர் பிளாக் (Pavar Block) போட்டிருக்க வேண்டும்.
உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.
மேலும் உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் எம்.ஆர்.பி., விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.
உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட 30 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
**-வினிதா**