சமயபுரம் கோயில் யானை தாக்கி பேச்சிழந்த பெண்ணுக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் சிந்து லட்சுமி. 1999 அக்டோபர் 3ஆம் தேதி ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். அப்போது மூன்று வயதாக இருந்த சிந்து லட்சுமியைக் கோயிலிலிருந்த யானை தும்பிக்கையால் தாக்கியதில் அவர் பேசும் திறனை இழந்துவிட்டார்.
சிந்து சுவாசிப்பதற்காகத் தொண்டையில் துளையிட்டு செயற்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் குழாய் வழியாக அவருக்குத் திரவ உணவும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழலிலும் அவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.
இந்தச் சூழலில் கோயில் யானை தாக்கியதில் கடுமையான பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு கேட்டு 20 ஆண்டுகளாக மனு கொடுத்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சிந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும் அந்த மனுவில், யானையைக் கோயில் நிர்வாகம் சரியாகப் பராமரிக்காமல் விட்டுள்ளனர். இதனால் யானை என்னையும் எனது தாயாரையும் கடுமையாகத் தாக்கியது. இதில் எனது தாயார் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார். நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து இழப்பீடு வழங்கவும், மருத்துவ சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கோயில் வளாகத்தில் மனுதாரரை யானை தாக்கி உள்ளது. இதற்கு கோயில் நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மனுதாரருக்கு அவரது தகுதிக்கு ஏற்ப அரசு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் நான்கு வாரத்தில் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
**-பிரியா**�,