புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு ஊழியர்கள், ஊதிய மேம்பாடு, காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 56 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் திடீரென இன்று (பிப்ரவரி 19) தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே திரண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களின் பிரதிநிதிகள் சிலரை மட்டும், முதல்வர் ஊரில் இல்லாததால் தலைமைச் செயலகம் அழைத்து செல்வதாக போலீசார் கூறியிருக்கின்றனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் தடுப்பை மீறி ஆவேசமாகத் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகையிட முற்பட்டனர். அவ்வாறு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடற்கரைச் சாலையிலேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையிலேயே படுத்து போராட்டம் நடத்தியதால் அங்கு போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். பெண் அரசு அதிகாரிகளையும் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள திருமண மண்டபங்களில் போலீசார் தங்க வைத்துள்ளனர். இந்த திடீர் போராட்டத்தின் எதிரொலியாக அப்பகுதியில் அதிரடி போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
தலைமைச் செயலகம் முற்றுகையிடுவது தொடர்பாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் வந்து பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக சேப்பாக்கம், போர் நினைவுச்சின்னம், கடற்கரைச் சாலை, தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகள் பரபரப்பாகக் காணப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில், அரசு ஊழியர்களின் பிரச்சனை திடீரென வெடித்ததால் முதல்வர் பழனிசாமி அதிர்ச்சியாகி இருப்பதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
** – பிரியா**�,