aகிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் பப்பு

Published On:

| By Balaji

பல வண்ணங்களிலுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள் என்று கோடைக்கால உணவுகளில் பரிந்துரைக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். அவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நோய்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டவை. நாம் இப்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளோம். அதற்கு இந்த நீர்ச்சத்துமிக்க சுரைக்காய் பப்பு உதவும். சமைத்துச் சாப்பிட்டு அதன் பலனைப் பெறுவோம்.

**என்ன தேவை?**

பொடியாக நறுக்கிய சுரைக்காய் – ஒரு கப்

பாசிப்பருப்பு – கால் கப்

துவரம்பருப்பு – கால் கப்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – மூன்று

காய்ந்த மிளகாய் – இரண்டு

பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்

பூண்டு பற்கள் – நான்கு

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

பூண்டு பற்களைத் தோலுரித்துத் தட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். புளியை ஊறவைத்து, மூன்று டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு மற்றும் துவரம்பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு சிறிய குக்கரில் ஊறவைத்த பருப்பு, நறுக்கிய சுரைக்காய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரைத் திறந்து தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து லேசாக மசித்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், அதில் கடுகு வெடித்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து புளித்தண்ணீரையும் சேர்த்து அடுப்பை அணைத்து வேகவைத்தவற்றுடன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: புடலங்காய் சப்ஜி](https://minnambalam.com/public/2021/04/22/1/snake-guard-sabji)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share