Wஎகிறும் தங்கம் விலை: காரணம் என்ன?

Published On:

| By Balaji

சென்னையில் நேற்று (ஜூலை 8) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.37,536க்கு விற்பனையாகிறது.

தற்போதைய இக்கட்டான சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதற்குக் காரணம் என்ன… “தங்கத்தை நாம் அமெரிக்க டாலர்களில் வாங்குகிறோம். இந்தியா உற்பத்தியை விட, அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு. கடந்த 2018-2019ஆம் ஆண்டில் 1,664 கிலோ தங்கத்தை மட்டுமே நாம் உற்பத்தி செய்தோம். மேலும் இதே காலகட்டத்தில் அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளோம். இவ்வாறு இறக்குமதி செய்யும்போது இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர்களின் மதிப்பிலேயே தங்கத்தை வாங்குகிறோம்.

ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலர்களின் மதிப்பில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. கொரோனா காலத்துக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்க உள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலர்களின் மதிப்பில் சரிவையே சந்திக்கும்.

எப்போதெல்லாம் இந்திய ரூபாய், அமெரிக்க டாலர்களின் மதிப்பில் சரிவைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை உயரும். அதன்படி பார்க்கும்போது, இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறும் பொருளாதார நிபுணர்கள்,

மேலும், “2015ஆம் ஆண்டுக்குப் பிறகு, தங்க உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. உலக தங்கக் குழுமத்தின் அறிக்கையின்படி, நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் வருடாந்தர அடிப்படையில் மூன்று சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பொது முடக்கத்தின் காரணமாகச் சுரங்கப்பணிகள் தடைப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பதும் விலையேற்றத்துக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது” என்றும் குறிப்பிடுகிறார்கள்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share