37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

public

சென்னையில் நேற்று (ஜனவரி 26) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,637ஆக உயர்ந்து பவுனுக்கு ரூ.37,096-க்கு விற்பனையாகியுள்ளது.

தங்கம் விலை சில வாரங்களாக தொடர்ந்து குறைந்ததால் பவுன் 37,000 ரூபாய்க்கு கீழ் வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றதாழ்வு இருந்து வந்தது. நேற்று முன்தினம் (ஜனவரி 25) தங்கம் ஒரு பவுன் ரூ.36,840-க்கும் ஒரு கிராம் ரூ.4,605-க்கும் விற்றது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 26) தங்கம் விலை மீண்டும் பவுன் 37,000 ரூபாயை தாண்டியது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.37,096-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,637ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.68,500ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்கிறது.

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நம்பவர் 1ஆம் தேதி ஒரு பவுன் ரூ.35,944-க்கு விற்றது. அதன்பின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியே வந்த நிலையில் நேற்று பவுன் ரூ.37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

“கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு, கடந்த சில மாதங்களில் மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தேறியுள்ளன. மேலும், மெல்ல மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் மக்கள் தங்கள் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதையொட்டி மக்கள் தங்கம் வாங்க தங்கக்கடைகளை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத தங்கத்தேவை இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது.

உலக தங்கக் கவுன்சிலின் கணக்கின்படி, சென்ற வருட தங்க தேவையைவிட 350 டன் அதிகமாக நடப்பு ஆண்டில் தேவைப்படுகிறது. 2014ஆம் ஆண்டு நமது தங்கத்தேவை 898.6 டன்னாக இருந்துள்ளது. அதன் பிறகு, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நமது தங்கத்தேவை தற்போது 900 டன்னாக உயர்ந்து உள்ளது.

தங்கத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, விலையும் ஏறிக் கொண்டேபோகிறது. ஆனால், மக்களின் தங்கத்தேவை மற்றும் தங்கமோகம் மட்டும் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருவதைப் பார்த்து, பலரும் நகைகளை வாங்கி வருகிறார்கள். விலை இன்னும் உயர்ந்தால் என்ன செய்வது என்கிற பயம்தான் அவர்கள் தற்போது தங்கம் வாங்க முக்கியமான காரணம்” என்கிறார்கள் நகைக்கடை உரிமையாளர்கள்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.