இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை 1ஆம் தேதியையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். இலங்கையின் தேசிய புத்தாண்டு தினம் தொடங்குவது நள்ளிரவு 12 மணிக்கு அல்ல. ஜோதிடர்கள் குறித்துத் தரும் குறிப்பிட்ட நேரத்தில்தான் அங்கு புத்தாண்டு பிறக்கும். முந்தைய ஆண்டின் இறுதி மணித்துளிகளும் ஜோதிடர்களால்தான் குறிக்கப்படும். அதனால் பழைய ஆண்டு முடிவதற்கும், புதிய ஆண்டு பிறப்பதற்கும் இடையே சில மணி நேர இடைவெளியும் இருக்கும். இந்த இடைவெளியை சிங்களத்தில் Nona Gathe எனக் குறிப்பிடுகிறார்கள். அன்றைய தினத்தில் இந்த கோகீஸ் பரிமாறி மகிழ்வார்கள்.
**என்ன தேவை?**
மைதா – 2 கப்
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை
தேங்காய்ப்பால் – ஒரு கப்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா அல்லது ரோஸ் எசென்ஸ் – சில துளிகள்
எண்ணெய் – பொரித்தெடுக்க
**எப்படிச் செய்வது?**
மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதாவுடன் தேங்காய்ப்பால், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். மரக்கரண்டியால் மாவை நன்கு அடித்துக் கலந்து, எசென்ஸ் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் கோகீஸ் மோல்டை (அச்சு முறுக்கு மோல்டைப் பயன்படுத்தலாம்) ஒரு நிமிடம் வைக்கவும். மோல்டை வெளியே எடுத்து மாவில் தோய்க்கவும். மாவில் முழு மோல்டையும் தோய்க்கக் கூடாது. முக்கால் பகுதி மட்டுமே மூழ்க வேண்டும். சூடான மோல்டில் மாவு ஒட்டிக்கொள்ளும். அதை அப்படியே எடுத்து சூடான எண்ணெயில் வைக்கவும். பாதி வெந்ததும் ஒரு ஸ்பூன் உதவி யால் தளர்த்திவிட்டால் கோகீஸ் எண்ணெயில் விழுந்துவிடும். ஸ்டீல் குச்சியால் திருப்பிவிட்டு இருபுறமும் நன்கு மொறுமொறுப்பானதும் எடுத்து வடிதட்டில் வைக்கவும்.
ஒவ்வொரு முறையும் மாவில் தோய்ப்பதற்கு முன் சூடான எண்ணெயில் மோல்டை வைத்து எடுத்தால்தான் மாவு ஒட்டும். கோகீஸைப் பதமாகத் தயாரிக்க வேண்டும். மாவு மிகவும் நீர்க்கவோ, கெட்டியாகவோ இருக்கக் கூடாது.
**[நேற்றைய ஸ்பெஷல்: சதசதயம் – கேரளா](https://minnambalam.com/public/2021/04/15/1/sadhasadayam-kerala)**
.�,