தமிழகத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், திடீரென ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் சினிமா பாணியில், பாபநாசத்தைச் சேர்ந்த தந்தை, மகன் 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையும், பாபநாசத்தில் இருக்கும் செயிண்ட் மேரி பள்ளியில் பயின்ற மகனும் தேர்ச்சி அடைந்ததுதான் சுவாரஸ்யம். 2004 முதல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில், பாபநாசத்தைச் சேர்ந்த சுகுமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 12ஆம் வகுப்புத் தேர்வை இவரும், இவரது மகன் சுரேஷும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எழுதினர். இதில், சுரேஷ் 600க்கு 431 மதிப்பெண்களும், சுகுமார் 320 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் கொரோனா பரவல் காரணமாக இவர்களால் ஒருவரை ஒருவர் சந்தித்து வெற்றியைக் கொண்டாட முடியவில்லை.
தேர்வு வெற்றி குறித்து மகன் சுரேஷ் கூறுகையில், ** “எனது தந்தை 12ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் எங்கள் வெற்றியை ஒன்றாக கொண்டாட முடியவில்லை. விரைவில் லட்டு வாங்கி சென்று சிறையில் அப்பாவை பார்ப்பேன்”** என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக அப்பாவை நேரில் சந்திக்கும் போது, என்னை நன்றாக படிக்க சொன்னார். அதையேதான் நானும் அவரிடம் சொன்னேன். இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டோம். முதல் முயற்சியிலேயே இருவரும் தேர்வில் வெற்றி பெற விரும்பினோம். எங்களால் அதை செய்ய முடிந்தது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். டிப்ளோமா எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புவதாகவும் சுரேஷ் கூறியுள்ளார்.
“சிறையில் அடைக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் எப்போதும் நிறையக் கஷ்டப்படுகிறார்கள். சுரேஷ் சிறந்த மாணவர் என்பதால் அவர் அதிக மதிப்பெண் எடுப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். சுரேஷ் ஸ்பான்சருடன் தனது உயர் கல்வியைத் தொடர உதவி செய்வோம்” என்று சிறைவாசம் அனுபவிக்கும் பெற்றோரின் குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் திருநெல்வேலியை தளமாகக் கொண்ட குளோபல் நெட்வொர்க் ஃபார் ஈக்வலிட்டி தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனரும், மனநல ஆலோசகருமான கே ஆர் ராஜா தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள சுகுமார் எங்களிடம் மகனின் உயர் கல்விக்கு உதவ முடியுமா என்று கேட்டார். அதற்கு நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று உறுதி அளித்ததாகவும் ராஜா கூறியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் குடும்ப தகராறு காரணமாக உறவினரைக் கொலை செய்த வழக்கில் சுகுமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2014ல் சுகுமார் பரோலில் வந்திருந்த போது. மன அழுத்தத்திலிருந்த அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பிள்ளைகளைத் தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் சுகுமார். இந்நிலையில் இருவரும் 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களது குடும்பத்தில் இவ்வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் சுரேஷின் தங்கையும் தேர்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**கவிபிரியா**�,”