தமிழக அரசின் ஆன்லைன் மணல் விற்பனையில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கறம்பயம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக அரசு ஆன்லைன் மூலமாக குறைந்த விலையில் மணல் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைனில் மணலை முன்பதிவு செய்வதற்கு லாரி உரிமையாளர்கள் நுழைவு, பொதுமக்கள் நுழைவு என இரண்டு முறைகள் உள்ளன. பொதுமக்களுக்கான நுழைவு மூலமாக வெள்ளிக்கிழமை மட்டுமே மணலை முன்பதிவு செய்ய முடியும். அப்படி திறந்திருக்கும் அன்றைக்கும் மணல் முன்பதிவு முடிந்தவிட்டதாகத் தெரிவிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு மணல் கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது. ஆன்லைனில் ரூ.6,500க்கு மணலை வாங்கி, வெளியில் ரூ.40,000க்கு விற்கின்றனர் லாரி உரிமையாளர்கள். இதனால் பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் அனைத்து நாட்களிலும் சிரமமின்றி, குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (மார்ச் 17) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது, மக்கள், லாரி உரிமையாளர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய தனித்தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மணல் இருப்பைப் பொறுத்து விநியோகிக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆற்று மணலை லாரி உரிமையாளர்கள் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆன்லைன் மணல் விற்பனையில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மீதமுள்ள மணலை லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
**வினிதா**
�,”