பிரசவ தேதி: கர்ப்பிணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Balaji

கொரோனா தொற்று தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட சுகாதாரப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சுகாதாரத் துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவையான மருந்து, மாத்திரைகளை கிராம சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவர் மூலம் பெற்று டாக்டர்களின் தகுந்த அறிவுரையின்படி சாப்பிட வேண்டும். அனைத்து கர்ப்பிணிகளும் பிரசவ தேதியின் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாகச் சேர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக கிராம சுகாதார செவிலியர் அல்லது அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலரைத் தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் வெளியில் செல்வதைக் கூடிய வரையில் தவிர்க்க வேண்டும்.

இதன் மூலம் கொரோனா தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 93464 67903, 94999 33860 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் உரிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share