என்னுடைய கடைசி நிமிடங்கள்: காவலரின் வாட்ஸ் அப் மெசேஜ்!

Published On:

| By Balaji

செஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சரவணன் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது வாட்ஸ் அப் குழுவில் என்னுடைய கடைசி நிமிடங்கள் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகச் சரவணன் என்பவர் பணியாற்றி வந்தார். நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று பணி முடிந்து ஆலத்தியூர் காட்டுப்பகுதிக்குச் சென்று [தற்கொலை]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/03/03/22/gingee-policeman-saravanan-attempts-suicide) செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சரவணன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக காவலர்கள் மட்டும் பயன்படுத்தும் வாட்ஸ் அப் குழுவில் தான் இருக்கும் லொக்கேஷனை ஷேர் செய்துள்ளார். அதோடு ’என்னுடைய கடைசி நிமிடங்கள், மன்னிச்சுடுங்க சார்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியைத் தொடர்ந்து சக காவலர்கள் சரவணனைத் தொடர்புகொண்டுள்ளனர். ஆனால் சரவணனைத் தொடர்பு கொள்ள முடியாததால் அவர் அனுப்பிய லொக்கேஷனுக்கு சென்று பார்த்த போது அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிச் சுமை காரணமா, குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து மூன்று காவலர்கள் உயிரிழந்துள்ளனர். மதுராந்தகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சேகர் நேற்று முன்தினம் (மார்ச் 1) தற்கொலை செய்துகொண்டார். திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த இவர் வயிறு வலி தாங்க முடியாமல் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று (மார்ச் 2) திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்டார். நேற்று நள்ளிரவு காவலர் சரவணன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அடுத்தடுத்து இதுபோன்று காவலர்கள் தற்கொலை செய்துகொண்டது காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share