தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்தது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட தொடங்கியது. தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயரத் தொடங்கியது. இதனால் சிறப்பு கொரோனா வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. படுக்கைகள், ஆக்சிஜன் கிடைக்காமல் மருத்துவமனை வாசல்களிலும், ஆம்புலன்ஸ் வாகனத்திலும் கொரோனா நோயாளிகள் அவதியுற்றனர். தினசரி 100க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள், உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய முடியாத அந்தந்த குடும்பத்தினர் தவிப்பு என ஒவ்வொரு நாளையும் கொரோனா நம் எல்லோரையும் வாட்டி எடுத்தது .
அந்த வகையில் முதல் அலை, 2ஆவது அலை, 3ஆவது அலை என தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துவிட்டதால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 50க்கு கீழ் குறைந்து காணப்படுகிறது. மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் காலியாக இருக்கின்றன.
2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, சென்னையில் உள்ள ஓமந்தூரார், ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, கிண்டி கொரோனா உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒரு கொரோனா நோயாளிகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று எந்த அரசு மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.