yமருத்துவர்களுக்கு மீண்டும் அரசு எச்சரிக்கை!

Published On:

| By Balaji

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பினர் (ஃபோக்டா) கடந்த 25ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்குத் திரும்பாவிட்டால் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று எச்சரித்தும் இன்று 7ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் 5 பேருக்கு பணியிட மாற்றம் உத்தரவை வழங்கி மருத்துவ கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே இன்று(அக்டோபர் 31) ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கமே போராடுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அவர்களை அழைத்து 29 ஆம் தேதி இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் 2 மணி நேரம் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கங்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்றே திட்டமிட்டுப் போராடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஒரு மாணவருக்கு அரசு ரூ.1.24 கோடி அளவுக்குச் செலவழிக்கிறது. ஆனால் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13,500 மட்டுமே செலவிடுகின்றனர். இதுவே தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்தால் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை செலவாகும்.

அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே, அரசு அவர்களது படிப்புக்காகச் செலவழிக்கிறது. சேவை நோக்கத்துக்காகவே மாணவர்களுக்கு அரசு செலவிடுகிறது. அரசுப் பணியில் சேர்ந்த பிறகும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள். அதையும் நிறைவேற்றி வைக்கிறோம். நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை நிறைவேற்றச் சொன்னால் எப்படி நிறைவேற்ற முடியும்.

வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொறியியல், மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இவ்வளவு செலவு அரசு செய்யவில்லை. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கல்வி கற்பவர்கள் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். எனவே அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .மக்களுக்குத்தான் அரசு, மக்களுக்குத்தான் மருத்துவர்கள். எனவே ஏற்கனவே அமைச்சர் அறிவித்தது போலப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே , மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெங்குகாய்ச்சல் பரவுவதை தடுக்கக் கோரிய வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share