நாடு முழுவதுமுள்ள சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை பிகார் போலீஸார் ரத்து செய்துள்ளனர்.
இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கும்பல் வன்முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், ஷியாம் பெனகல், ரேவதி, செளமித்ரா சாட்டர்ஜி, பினாயக் சென், ஆஷிஷ் நந்தி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதினர்.
இந்தக் கடிதத்துக்கு எதிராக பிகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், 49 பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமர் மோடியின் பணியையும் செயலையும் குறைத்து மதிப்பிடுவது போல் அக்கடிதம் இருப்பதாகவும் கூறி குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி, முசாபர்பூர் நகர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சூர்யகாந்த் திவாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இந்தியாவிலுள்ள திரைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக, முக்கியமான தலைவர்கள், கலைஞர்கள் மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களையும் கோரிக்கைகளையும் தொடர்ந்துவைத்த வண்ணமிருந்தனர்.
இந்த நிலையில், 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்பட்டதாக பிகார் போலீஸ் நேற்று (அக்டோபர் 9) அறிவித்தது. புகார் அளித்த நபர் தவறான தகவல்களைக் கொடுத்ததால்தான் பிரபலங்கள்மீது வழக்கு பதிவு செய்ததாக பிகார் போலீஸ் விளக்கமளித்துள்ளது.
புகாருக்குரிய போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய மனுதாரர் தவறிவிட்டார்; அதனால், பொய் புகார் அளித்தவர்மீது 182ஆவது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிகார் மாநில போலீஸ் தகவல் அளித்துள்ளது.�,