தூத்துக்குடி மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ், தூய்மை பணியாளர்கள், கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சுற்றுப்பகுதிகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். பூங்கா, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி நடந்தது. இதன் தொடக்க விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும். எம்.ஜி.ஆர். பூங்கா, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி நடந்தது. இந்தப் பணியில் 400 கல்லூரி மாணவ மாணவிகள், 400 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பொதுமக்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வாழ்வதற்கு மாநகராட்சி மூலம் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கமே மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும், தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், சுகாதாரத்தையும் பேண வேண்டும் என்பதே ஆகும்” என்று அவர் கூறினார்.
**-ராஜ்-**
.