�சிறப்புக் கட்டுரை: எதிர்ப்புரட்சிக் கூட்டணிக்கு ஓர் அச்சாணி: கீதா பிரஸ்

Published On:

| By Balaji

2

எஸ்.வி.ராஜதுரை

**பாசிசம்**

‘பாசிஸ்டுகள் ஆயிரம் ஆண்டுகளுக்குத் திட்டமிடுகின்றனர்’ என்றார் ஜெர்மனியில் நாஜிகளுக்கு எதிராகப் போராடிய அறிஞர் வால்டர் பெஞ்சமின். அதாவது, நாஜிகள் தொலைநோக்கு கொண்ட, நீண்டகால நலன்களை உள்ளடக்கிய திட்டத்தைக் கொண்டிருந்தனர் என்பதுதான் இதன் பொருள்.

‘காந்தியும் காங்கிரஸும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?’ என்ற நூலில் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்: “பார்ப்பனர்கள் எப்போதுமே நமக்குக் கூட்டாளிகளைக் கொண்டிருந்தனர் என்பதையும் அவர்கள் தமக்குக் கீழ்ப்பட்டு ஒத்துழைப்பதாக இருந்தால் அவர்களுக்கு ஆளும் வர்க்கம் என்ற தகுதியைத் தருவதற்குத் தயாராக இருந்தனர் என்பதையும் வரலாறு காட்டுகிறது. பண்டைக் காலத்திலும் மத்திய காலத்திலும் அவர்கள் சத்திரியர்கள் அல்லது ராணுவ வர்க்கத்தினருடன் அணி சேர்ந்து கொண்டனர். இருவரும் சேர்ந்து மக்களை ஆண்டனர்; இல்லை, மக்களை நசுக்கினர் – ஒருவர் தன் பேனாவைக் கொண்டும், மற்றவர் தன் வாளைக் கொண்டும். இப்போதோ பார்ப்பனர்கள், பனியா என்றழைக்கப்படும் வைசிய வர்க்கத்துடன் நேச அணி உருவாக்கியுள்ளனர். கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் இயல்பானதே. வணிகம் மேலோங்கியுள்ள இந்த நாட்களில் வாளைக் காட்டிலும் பணம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசியல் இயந்திரத்தை இயக்குவதற்குப் பணம் தேவை. பனியாக்களிடமிருந்துதான் பணம் வர வேண்டும். காங்கிரஸுக்கு பனியா பணம் கொடுக்கக் காரணம், காந்தி பனியாவாக இருப்பதுதான். அரசியலில் பணத்தை முதலீடு செய்வது பெரும் லாப ஈவுகளைப் பெற்றுத் தரும்.”

அம்பேத்கர் 1945இல் எழுதிய இந்த வாசகங்கள், இன்று ஆர்எஸ்எஸ் – பாஜகவால் தலைமை தாங்கப்படும் பார்ப்பன-பனியாக் கூட்டணிக்குத்தான் மிகவும் பொருத்தமுடையதாக உள்ளது என்பதை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டின் மூத்த பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான அக்‌ஷய முகுல் எழுதி 2015இல் வெளிவந்த ‘The Gita Press and the Making of Hindu India’ விரிவாக விளக்குகிறது. அறவாணனால் தமிழாக்கம் செய்யப்பட்டு கோவை விடியல் பதிப்பகத்தால் ‘இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்’ என்னும் தலைப்பில் 2017ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டுள்ள (720 பக்கங்கள்; விலை ரூ.650/-) இந்த அறிவுக் கருவூலக நூல், இந்துத்துவ பாசிஸ்டுகளும் நீண்டகாலத் திட்டத்தை உருவாக்கி, அதை எவ்வாறு பல்வேறு அரசியல் திருப்பங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றினூடேயும் எதிர்ப்புச் சக்திகள் பல்வற்றைத் தம்வயமாக்கியும் படிப்படியாக வளர்ச்சி பெற்று, இந்தியாவின் ‘இந்து ராஷ்டிரத்தை’ அமைக்கும் திசையில் முன்னேறிக்கொண்டிருப்பதை விரித்துரைக்கிறது.

**கீதா பிரஸ்ஸும் பனியாக்களும்**

பார்ப்பன-பனியா ஆட்சியை இந்தியாவில் நிறுவுவதற்காக, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, வருணதர்ம அமைப்பில் சத்திரியர்களின் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த பனியாக்களின் அரசியல், சமூக, பண்பாட்டுப் பாத்திரத்தைப் பற்றிய மிக முக்கியமான நூல் இது.

இந்தக் கூட்டணிக்கு வேண்டிய கருத்துநிலை வகைப்பட்ட, இலக்கிய, தத்துவ, அரசியல் கோட்பாடுகளை லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வெற்றிகரமாகத் திணிப்பதற்கு ஏறத்தாழ நூறாண்டுக் காலமாக அயராது பாடுபட்டு வரும் ஒரு வெளியீட்டகம், அது வெளியிட்டு வருகின்ற ஏடுகள், வெளியீடுகள் ஆகியன பற்றிய, நம்மை மலைக்க வைக்கிற உண்மைகளை நூற்றுக்கணக்கான தரவுகளையும் பல்லாண்டுக்கால ஆராய்ச்சியும் கொண்டு வழங்கியுள்ளார் முகுல்.

வடஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்துமதப் பற்று மிக்க குடும்பங்களில் மட்டுமல்லாது, அவ்வளவு பக்தி சிரத்தை காட்டாத குடும்பங்களிலும்கூட பிரசித்தி பெற்றதாக விளங்கும் இந்தி மாத ஏடு ‘கல்யாண்’. 1926ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் அந்த இதழை அச்சடித்துக் தருவது 1923இல் கோரக்பூரில் நிறுவப்பட்ட கீதா பிரஸ். இந்த இரண்டையும் நிறுவியவர்கள் ஜெய்தயாள் கோயிந்த்கா, ஹனுமன் பிரசாத் போத்தார் ஆகிய இரு மார்வாரிகள் (பனியாக்கள்). இந்து மத நூல்களையும் ஏடுகளையும் வெளியிடுவதில் முன்னுவமையற்றை கீதா பிரஸ்ஸின் ‘கல்யாண்’ இந்தி ஏடு இன்று இரண்டு லட்சம் பிரதிகளும் ‘கல்யாண் – கல்பதரு’ ஆங்கில ஏடு ஒரு லட்சம் பிரதிகளும் விற்பனையாகின்றன. 6.2.2014 வரையில் விற்பனையான கீதா பிரஸ் வெளியீடுகள்: பகவத் கீதையில் 71.9 மில்லியன் பிரதிகள் (ஒரு மில்லியன் = 10 லட்சம்), துளசிதாசரின் ராமசரித்ரமானஸில் 70 மில்லியன் பிரதிகள்; புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் 19 மில்லியன் பிரதிகள்; ‘லட்சியபூர்வமான இந்துப் பெண்களும் குழந்தைகளும்’ பற்றிய குறும்பதிப்புகள் 94.8 மில்லியன்; இந்து முனிவர்களின் வரலாறு, பக்திப் பாடல்கள் 65 மில்லியன்; ஏறத்தாழ 735 தலைப்புகளில் வெளியிடப்பட்ட இந்த வெளியீடுகளில் பெரும்பாலானவை இந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் உள்ளவை. இவற்றுக்கு அடுத்தபடியாக குஜராத்தி மொழியில் 152 தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கு, ஒதியா, ஆங்கிலம், வங்காளி, மராத்தி, தமிழ், கன்னடம், அசாமி, மலையாளம், நேப்பாளி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் கீதா பிரஸ்ஸின் வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. 1990களில் உருதுமொழியிலும் வெளியீடுகள் கொண்டுவரத் தொடங்கப்பட்டாலும் இதுவரை இரண்டு வெளியீடுகளே வந்துள்ளன. நம்மை மலைக்க வைக்கக்கூடிய எண்ணிக்கையிலான இந்த வெளியீடுகளும் ஏடுகளும் தோன்றுவதற்கான சமூக, பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணிகளை விளக்குகிறார் அக்‌ஷய முகுல்:

(1) 19ஆம் நூற்றாண்டில் இந்தி மொழிதான் இந்துக்களின் மொழி என்பதைத் திட்டவட்டமாக அறிவித்து தொடங்கப்பட்ட இயக்கங்கள்

(2) மார்வாடிகளால் தொடங்கப்பட்டாலும், அந்த வணிக வர்க்கத்தின் லாப வேட்டையைப் பின்னுக்குத் தள்ளி, இந்து சனாதனதர்மத்தையும் வர்ண -சாதி அமைப்பையும் காக்க வேண்டும் என்ற நோக்கத்தை கீதா பிரஸ்ஸும் ’கல்யாண்’ முன்நிறுத்தியமை.

(3) 1920களில் இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த அரசியல் போட்டிகளும் மதக் கலவரங்களும்.

‘கல்யாண்’ ஏடு தொடங்கப்படுவதற்கு முன்பும் அது தொடங்கியபோதும் வெளிவந்து கொண்டிருந்த பல இந்தி ஏடுகள் பற்றியும், அவற்றில் பெரும்பாலானவை இந்துத்துவ சார்புடையவையாக இருந்தது பற்றியும் நூலாசிரியர் ஏராளமான தகவல்களைத் தருகிறார். எனினும், மற்ற எல்லா ஏடுகளையும் வெளியீடுகளையும் புறந்தள்ளி கீதா பிரஸ்ஸும் ‘கல்யாண்’ ஏடும் அடைந்த வெற்றிகளுக்கு மூளையாகச் செயற்பட்டவர் ஹனுமன் பிரசாத் போத்தார்தான். அதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இந்து வலதுசாரி சக்திகள், இந்து மகா சபை, ஆர்எஸ்எஸ், ராமராஜ்ய பரிஷத், ஜன்சங், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மதவாத அமைப்புகள், நிர்வாண சாமியார்கள், கல்வியாளர்கள், பணக்கொடை அளிப்போர் ஆகியோரை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்ததுடன், இந்த வட்டாரங்களுக்கு அப்பாலும் சென்று, மதச்சார்பற்றவர்களாகவோ, வேறு மதத்தைச் சார்ந்தவர்களாகவோ இருந்த இந்திய அறிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரையும் – காந்தி, ரவீந்திரநாத் தாகூர், இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த், சோசலிஸ்ட் கட்சித் தலைவர் நரேந்திர தேவ் போன்றோர் – ‘கல்யான்’ ஏட்டில் எழுதச் செய்வதில் போத்தாருக்கு இருந்த மதிநுட்பம், சூழ்ச்சித் திறன் ஆகியவையும்தான்.

இந்த ஏட்டில் எழுத மறுத்த முக்கியக் காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு ஒருவர் மட்டுமே. அந்த ஏட்டில் உவகையுடன் எழுதிவந்த தென்னிந்தியர்களில் முக்கியமானவர்கள் காஞ்சி காமகோடி பீடாதிபதி (பரமாச்சாரியார்), சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (முன்னாள் குடியரசுத் தலைவர்), பட்டாபி சீத்தாரமையா (காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்தியத் தலைவராகவும் காந்தியின் அருமந்த சீடராகவும் இருந்தவர்), சர் சி.பி.ராமசாமி ஐயர், சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) ஆகியோர்.

**காங்கிரஸின் இந்துத்துவம்**

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான மதன் மோகன் மாளவியா, கே.எம்.முன்ஷி, ராஜேந்திர பிரசாத், சேத் கோவிந்த் தாஸ், புருஷோத்தம் தாஸ் தாண்டன், சேத் கோவிந்த் தாஸ், கமலாபதி திருபாதி, சம்பூர்ணானந்த், வினோபா பாவே, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டை நிறுவிய ராம்நாத் கோயங்கா, கோவிந்த வல்லப பந்த் (அவர் உ.பி முதலமைச்சராக இருந்தபோதுதான் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது) ஆகியோர் அப்பட்டமான இந்து தேசியவாதிகளாகவும், சனாதன தர்மத்தை ஆதரித்தவர்களாகவும் இருந்ததை ‘கல்யாண்’ ஏட்டில் அவர்கள் எழுதியவை, வேறு இடங்களில் அவர்கள் பேசியவை முதலியவற்றின் மூலம் எடுத்துரைக்கிறார் அக்‌ஷய முகுல்.

காங்கிரஸுக்கும் இந்துத்துவத்துக்கும் இருந்த தொடர்பு பற்றி அவர் எழுதுகிறார்: “1891இல் நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின்போது கெளரட்சணி (பசுப் பாதுகாப்பு) மாநாடு நடந்தது. 1922இல் இருந்து காங்கிரஸின் ஆண்டு மாநாடு நடக்கும்போதெல்லாம் இந்து மகாசபையும் கூட்டங்களை நடத்தி வந்தது. இது காங்கிரஸ் – இந்து மகாசபை உறவு முடிவுக்குவந்த 1937ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்தது.”

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் இந்து மத வெறியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 1954இல் கோரக்பூர் கீதா பிரஸ்ஸில் இரண்டு ஓவியக் கலைக்கூடங்களைத் திறந்துவைத்து, “பிற மதங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்க, பகவத் கீதை (மட்டுமே) ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சனாதன இந்து தர்மத்தின் கனவுகளைத் தங்களது சிறப்புப் பணிகள் வழியாக மெய்ப்படுத்தி வரும் கீதா பிரஸ் போன்ற நிறுவனங்கள் மீது நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறேன்…” என்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

எனினும், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை காந்தியின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்தவரும் ஒரே சமயத்தில் காங்கிரஸிலும் இந்து மகாசபையிலும் உறுப்பியம் வகித்தவருமான மதன் மோகன் மாளவியாவுக்குத்தான் ‘கல்யாண்’, பிற எல்லாக் காங்கிரஸ் வலதுசாரிகளைக் காட்டிலும் கூடுதலான மதிப்பு வைத்திருந்ததற்கான காரணங்களிலொன்று இறப்பதற்கு முன் மாளவியா விடுத்திருந்த அறிக்கைதான். அதை வெளியிடும் ‘பேறு’ போத்தாரின் ‘கல்யாண்’ இதழுக்கே கிடைத்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை இந்துக்கள் கட்டவிழித்துவிட வேண்டும் என்று மறைமுகமான அறைகூவல் விடுக்கும் அந்த அறிக்கையிலுள்ள முக்கிய பகுதிகளை ஷய முகுல் நூலின் தமிழாக்கத்தின் 352-353ஆம் பக்கங்களில் காணலாம். மாளவியா இறந்த பிறகு அவர் நினைவாக ஒரு சிறப்பிதழையும் வெளியிட்டது ‘கல்யாண்’.

**வருண தர்மமும் தீண்டாமையும்**

மாளவியாவால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பார்ப்பனிய வருண தர்மத்தைப் பின்பற்றிய போத்தார் தீண்டாமை நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன் பொருட்டு அவரிடம் நெருக்கமாக இருந்த காந்தியைக்கூட கடுஞ்சொற்களால் விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் ‘இந்து’ சமுதாயத்திலிருந்து விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக காந்தி பரிந்துரைத்த மெல்லிய சீர்திருத்தங்களைக்கூட போத்தாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அம்பேத்கர் கோரிய ‘இரட்டை வாக்காளர் தொகுதி’ முறையை ஒழித்துக்கட்டிய புனே ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியின் ஆசியுடன் தாழ்த்தப்பட்டோர் கோயில்களில் நுழைவதற்காக, ‘ஹரிஜன் சேவக் சங்’ மேற்கொண்ட நடவடிக்கைகளைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்த போத்தார் காந்திக்கு எழுதினார்: “இன்று நாடு முழுவதும் தலித்துகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அது உங்கள் உண்ணாநோன்புக்குப் பிறகு தீவிரமாகிவிட்டது… பல இடங்களில் வருண சாதியினர் தலித்துகளோடு அமர்ந்து உணவருந்துகிறார்கள். அவர்களோடு சமபந்தியில் உட்காருவதால் அவர்கள் நம்மோடு சமமாகிவிடுவார்கள் என் நான் கருதவில்லை…”

தொடக்கம் முதலே இத்தகைய கருத்துகளோடு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை உமிழ்ந்துவந்த போத்தாரிடம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்திவந்ததோடு அந்த ஏட்டை வாழ்த்தவும் செய்திருக்கிறார் காந்தி: “…கல்யாண் மற்றும் கீதா பிரஸ் வழியாக நீ செய்துகொண்டிருப்பது இறைவனுக்குச் செய்யும் மிகப் பெரிய பணி” என்று 1935இல் போத்தாருக்கு எழுதிய கடிதத்தில் காந்தி கூறினார்.

காந்திக்கும் போத்தாருக்கும் இருந்த உறவில் நெருக்கமும் உரசலும் இருந்துவந்ததற்கு சாதி பற்றிய காந்தியின் இரட்டை நிலைப்பாடே என்பதைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், காந்தியை மடக்குவதற்காக போத்தார் ஒருமுறை ‘நவஜீவன்’ ஏட்டில் காந்தி சாதியையும் சனாதன தர்மத்தையும் ஆதரித்து எழுதிய கட்டுரைகளை அவரிடமே எடுத்துக் காட்டியிருக்கிறார். பசுப் பாதுகாப்பு சங்கத்தை காந்தி தோற்றுவித்தபோது அவரைப் புகழ்ந்த போத்தாரின் ‘கல்யாண்’, தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கத்துக்கு காந்தி ஆதரவளித்தமை, பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான காந்தியின் நிலைப்பாடு, மதக் கலவரங்களின்போது காந்தி எவர் சார்பாகவும் நிற்காமல், மதங்களுக்கிடையேயான இணக்கம் பற்றிப் பேசியமை முதலியவற்றின் காரணமாக அவரைத் தனிப்பட்ட முறையில் இகழ்ந்து எழுதியிருக்கிறது.

1956இன் பிற்பகுதியிலும்கூட போத்தார் தீண்டாமை பற்றிய தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை. “தீண்டாமையைக் கடைப்பிடிப்பதன் பொருள் ஒருவரை வெறுக்கிறோம் என்பதல்ல; மேலும், தீண்டாமை அறவியல் சார்ந்தது; சாஸ்திரங்கள் தீண்டாமையை அனுமதிக்கின்றன.” மேல் சாதியினர் தீண்டாதோரைத் தொடாமலே அவர்கள் மீது அன்பு காட்ட முடியும் என்ற கருத்தை பனியாவுக்கே உரிய நயவஞ்சகத்துடன் கூறிவந்தார்: “நமது மதிப்புக்குரிய அன்னை, நமது அன்புக்குரிய மனைவி ஆகியோரை அவர்களது மாதவிலக்கு நாட்களில் தீண்டாதிருப்பதைப் போன்று.”

இதே போன்ற குதர்க்கவாதத்தை போத்தார் ‘கல்யாண்’ இதழில் இன்னொரு நேரம் முன்வைத்தார்: ஹரிஜனங்களை வெறுப்பது பாவச்செயல். பிராமணனுக்கும் ஹரிஜனுக்கும் வேறுபாடே இல்லை. கற்றறிந்த பிராமணன், சண்டாளன், பசு, யானை, நாய் ஆகிய அனைவரிடமும் உள்ள ஆன்மா ஒருவனே. எனவே கற்றறிந்த மனிதன் அவர்களை அதே கண்களால் பார்க்கிறான். “ஆனால் (இதன் பொருள்) அனைவரிடமுமான அவனுடைய நடத்தை ஒரே தரப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதல்ல. பிறர் செய்வதற்கானது என்று ஒதுக்கப்பட்ட பணியை ஒரு ஹரிஜன் செய்வதற்கு உரிமை இல்லை.” அவர் இன்னொரு கட்டுரையில் கூறினார்: “தீண்டத்தகாதவர்களுக்கு விடுதலை என்று அழைப்பு விடுத்ததன் வாயிலாக அம்பேத்கர் வளர்வதற்கு வழிவகுத்தோம்.”

மதனகோபால் சிங்கால் என்பவர் ‘கல்யாணி’ல் எழுதிய கட்டுரை, “தீண்டத்தகாதவர்கள் இயற்கைக் கடவுள்களாகிய சூரியன், சந்திரன், நெருப்பு, பூமி, கங்கை, ஆலமரம் போன்றவற்றை வழிபடுவதற்கு உரிமையுடையவர்கள். கடவுள்களின் வேறு வடிவங்களை, அதாவது வேத மந்திரங்களை ஓதி உயிர் கொடுக்கப்பட்ட கல் உருவங்களை இருபிறப்பாளர் மட்டுமே வழிபட முடியும்… தீண்டத்தகாதவர்களுக்கென தனி ஆலயம் கட்டிக் கொள்ளலாம்.”

தீண்டாமைக்கான ‘அறிவியல்’ காரணங்களையும் அந்தக் கட்டுரை கூறியது: “தலைமுறை தலைமுறையாக ஒரு பங்கி (துப்புரவுப் பணியாளர்) செய்ய வேண்டிய வேலையை செய்து வருவதன் காரணமாக அவர்களின் உடலில் தொற்று நோய்க் கிருமிகள் உண்டாகின்றன என்பது மகரிஷிகளின் கூரிய நோக்குடைய கண்களின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தீண்டாமை நடைமுறையைத் தொடர்வதற்கான தேவை உள்ளது.”

இந்துப் பண்பாடு பற்றி 1950இல் ‘கல்யாண்’ கொண்டு வந்த சிறப்பிதழில் ‘வருணாசிரம சுயராஜ்ய சங்கம்’ எழுதிய கட்டுரை கூறியது: “மாண்புடைய செயல்களைச் செய்தவர்கள் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும் பிறந்திருக்கிறார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் சண்டாளர்களாகப் பிறந்துள்ளனர்… பாவம் செய்யும் மனிதனின் உடல் தூய்மையற்றது. தூய்மையற்றதை அவன் அடுத்த பிறவிக்கும் கொண்டு செல்கிறான். தீண்டத்தகாதவர்கள் முற்பிறவியில் செய்த தீய செயல்களின் விளைவாகவே ஆலயங்களில் நுழைய முடியாதவாறு தடை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் தீய செயல்களுக்காக வருந்தினால் ஆலயங்களுள் நுழைவதிலும் மேலான தூய்மை அடைவார்கள்.”

அதாவது, தீண்டத்தகாதோர் முற்பிறவியில் செய்த தீய செயல்களுக்கு வருந்தினாலும்கூட அவர்களுக்குக் கோயிலில் நுழையும் உரிமை இல்லை என்பதைத்தான் இந்தக் கட்டுரை கூறுகிறது.

மனு ஸ்மிருதி மனிதர்களிடையே பாகுபாட்டைக் காண்பதில்லை என்பதை நிறுவுவதற்காக மேற்சொன்ன கட்டுரை ஒரு குதர்க்க வாதத்தை முன்வைத்தது: “சண்டாளன் ஒருவனைத் தீண்டினால் நீராட வேண்டும் எனக் கூறும் மனு ஸ்மிருதி, மாதவிடாயான அல்லது குழந்தைக்குப் பால் ஊட்டும் பெண்ணைத் தீண்டினாலும் அவள் ஒருவனின் தாயாக, உடன்பிறந்தவளாக இருப்பினும் நீராட வேண்டும் என்றும் விதிக்கிறது”

இது மட்டுமல்ல, மேல் சாதி இந்துக்களை இரக்க குணம் படைத்தவர்களாகவும் காட்டியது இக்கட்டுரை: “தீண்டத்தகாதவர்களை உயர் சாதியினர் கொடுமைப்படுத்தியிருந்தால், அவர்களுக்கு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினருக்கு ஏற்பட்ட முடிவே ஏற்பட்டிருக்கும் – கோடிக்கணக்கான தீண்டத்தகாதவர்கள் உயிரிழந்திருப்பர்.”

கீதா பிரஸ்ஸும் வருண – சாதி அடிப்படையிலேயே இயங்கி வந்தது: “…வருண அமைப்பை, கீதா பிரஸ் கட்டுமான அமைப்பிலிருந்தும்கூட பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவே, பதிப்பகத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளையான கோவிந்த் பவன் காரியாலயம் கட்டுவித்திருந்தது. அங்கு உறுப்பினராவதற்கு பிராமண, சத்திரிய, வைசிய சாதிகளைச் சார்ந்த எந்தவொரு சனாதன தர்ம இந்துவுக்கும் உரிமை உண்டு. ஆனால் இரு பிறப்பாளர் அல்லாத, நான்காவது வருணத்தாரான சூத்திரர் மற்றும் தீண்டத்தகாதவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு உரிமை இல்லை.”

**அம்பேத்கர் மீதான தாக்குதல்**

தீண்டப்படாதவர்களும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததற்காக தொடக்கத்திலிருந்தே அம்பேத்கரை கடுமையான சொற்களால் இழிவுபடுத்தி வந்த ‘கல்யாண்’, இந்திய அரசமைப்பு அவையில் ‘இந்து சட்ட மசோதாவை’க் கொண்டு வந்ததற்காக அவரது சாதிப் பெயரைச் சுட்டிக்காட்டி அவர் மீது கொடுஞ்சொற்களைப் பொழிந்தது: “…அம்பேத்கர் அறிமுகப்படுத்தியுள்ள இந்து சட்ட மசோதா, இந்து தர்மத்தை அழிப்பதற்கான அவரது சதித் திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதி என்பது இப்போது உறுதியாகிறது. அவரைப் போன்ற ஒரு மனிதர் இந்துக்களின் சட்ட அமைச்சராக இருப்பது, அவர்களை இழிவுபடுத்துவதாகவும், நாணமுறச் செய்வதாகவும் இருப்பதோடு இந்து தர்மத்தில் ஒரு கரும்புள்ளியாகவும் உள்ளது. அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறும், இந்து சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுமாறும் அரசுக்கு நாம் அமைதியான ஆனால் உறுதியான முறையில் நெருக்குதல் தர வேண்டும்.”

இந்த மசோதாவை முறியடிக்க ‘கல்யாண்’ ஏடும் போத்தாரும் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொகுத்துக் கூறுகிறார் அக்ஷய முகுல். ஒரு சாமியார் கண்ட கனவு என்ற பெயரில் ‘கல்யாண்’, ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஒரு பார்ப்பனப் பெண்ணை ஏமாற்றி அவளின் தந்தையிடமிருந்து பணம் பறித்துக்கொண்ட ஒரு சாமர் (தாழ்த்தப்பட்ட) சாதியைச் சேர்ந்தவனுக்கு ஆதரவாக அம்பேத்கர் வழக்காடுவதாகவும், அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அந்தப் பார்ப்பனப் பெண்ணுக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கூறியதால், அவரை பதவி நீக்கம் செய்வதாக அம்பேத்கர் அச்சுறுத்துவதாகவும் அந்த சாமியார் கனவு கண்டதாக அக்கட்டுரை கூறியது.

1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு பம்பாய் தனித் தொகுதியிலிருந்து போட்டியிட்ட அம்பேத்கர் தோல்வியுற்றதிலும் போத்தாருக்குப் பங்கு இருந்தது. இந்து சட்ட மசோதாவைக் கொண்டுவந்த அவரை “முழு வலிமையோடு எதிர்க்கும்படி வாக்காளர்களை போத்தார் கேட்டுக் கொண்டார்.”

**காங்கிரஸ் பழைமைவாதிகள், இந்துத்துவவாதிகள், தொழிலதிபர்கள்**

காந்தி இறந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 1951இல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தைத் தலைவராகக் கொண்டதும் காங்கிரஸ் தலைவர்களைச் செயற்குழுவில் முதல்நிலைப்படுத்தியதுமான ‘இந்தியப் பண்பாட்டுக் கழக’த்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் ‘இந்தியப் பண்பாட்டுக்குப் பங்களித்தவர்’ என்ற முறையில் போத்தார் அழைக்கப்பட்டிருந்தார். அச்சமயம் அவர் பசுப் பாதுகாப்பு, இந்து சட்டத் தொகுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு, ராமன், கிருஷ்ணன் பிறப்பிடங்கள் மீட்பு ஆகியவற்றுடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டிருந்தார்.

1950ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அவர் ‘பாரதிய சதுர்நாம் வேத பவன் நிவாஸ்’ (அனைத்திந்திய நான்கு புனித தலங்களின் வேத பவனம் அறக்கட்டளை) அமைப்பின் செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பத்ரிநாத், ஜகனாத் பூரி, ராமேஸ்வரம், துவாரகை ஆகியவற்றில் வேத பவனங்களைக் கட்டுதல், வேத நாகரிகத்தைப் பரப்புதல், வேத மந்திரங்களையும் சடங்குகளையும் ஓதுதல், வேதங்களையும் அவை தொடர்பான இலக்கியங்களையும் கற்பித்தல் போன்ற பணிகளுக்காக நிறுவப்பட்ட அந்த நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த பழைமைவாதிகள், இந்து மகா சபையினர், தொழிலதிபர்கள் ஆகியோராவர். ஒரு மதம் சார்ந்த நடவடிக்கைகளில் அரசாங்கப் பதவிகளில் இருப்பவர்கள் பங்குபெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றபோதிலும் அச்சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்புக் கொண்டிருந்த மூன்று மாநில ஆளுநர்களுடன் (காங்கிரஸ் கட்சிக்காரர்கள்) – உ.பி ஆளுநர் விஸ்வநாத் தாஸ், பிகார் ஆளுநர் அனந்தசயனம் ஐயங்கார், ராஜஸ்தான் ஆளுநர் சம்பூர்ணானந்த், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சென்னை மாகாண முன்னாள் ஆளுநர் ஸ்ரீபிரகாசாவும், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனர் ராம்நாத்கோயங்காவும் (நீண்ட காலம் காங்கிரஸிலிருந்த அவர், 1970களில் ஜன சங்கத்தில் சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்) இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

**கீதைப் பரப்புப்பணியும் இந்து பண்பாடும்**

காங்கிரஸில் இந்து வலதுசாரிப் பழைமைவாதிகளுக்கு இருந்த பிடிப்புக்கான இன்னொரு எடுத்துக்காட்டாக இருப்பவர் கீதையைப் பரப்புவதிலும் இந்துத்துவத் திட்டங்களை மக்கள் மீது திணிப்பதிலும் கடைசிவரை வெறித்தனமாக செயற்பட்ட பாபா ராகவதாஸ் என்ற மராத்தியப் பார்ப்பனர். இவர் தலைவராக இருந்த ‘கீதை சங்கத்தில்’ உறுப்பியம் வகித்தவர்கள், 1940இல் வைசிராயின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வி.டி.சாவர்க்கரால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஷியாம் பிரசாத் முகர்ஜி, பி.எஸ்.மூஞ்செ ஆகிய இந்து மகா சபா தலைவர்களும் அடங்குவர். 1952இல் நடந்த பொதுத் தேர்தலில் பைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, சோசலிஸ்ட் தலைவரும் தேசிய விடுதலைப் போராட்ட வீரருமான நரேந்திர தேவ்வைத் தோற்கடித்தவர்தான் இந்த பாபா ராகவதாஸ்.

கீதையின் பெருமை பற்றி ‘கல்யாண்’ இதழில் எழுதுமாறு இந்தியாவிலும் வெளிநாட்டிலுமுள்ள பல அறிஞர்களுக்கும் இறையியலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் போத்தார். அதற்குப் பதிலளித்தவர்களில் ஒருவரும் நியூயார்க் ஹண்டர் கல்லூரியைச் சேர்ந்தவருமான எர்னஸ்ட் பி.ஹார்விட்ஸ், “கீதையில் அத்வைதத்தை உறுதியுடன் காத்து நின்ற சத்திரியர்கள் காட்டிய வீரமிக்க செயல்பாடுகள் நாஜிகளின் சிந்தனையில் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கின்றன” என்று வியந்து கூறினார்.

1950இல் ‘கல்யாண்’ கொண்டுவந்த இந்து பண்பாட்டுச் சிறப்பிதழில் அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ராஜகோபாலாச்சாரியும் இந்துப் பண்பாடு இந்தியப் பண்பாடு மட்டுமல்ல, உலகப் பண்பாடும் ஆகும் என்று கூறும் கட்டுரை எழுதினார். காந்தியவாதி வினோபா பாவே எழுதிய கட்டுரை “வருண அமைப்பில் நம்பிக்கை கொண்டவன் இந்து” என்று கூறியது.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு வங்காளம்தான் வழிகாட்டியாக இருந்தது என்று நமக்கு எப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்திய தேசியம் என்பதை இந்து தேசியமாகவேதான் வங்காள தேசியவாதிகள் பலருடன், நீதிபதிகள், வரலாற்று ஆய்வாளர்கள் எனப் பலதரப்பட்ட வங்காளி அறிவாளிகள் கருதியும் அவ்வாறே செயல்பட்டும் வந்தனர் என்பதை அக்‌ஷய முகிலின் நூல் எடுத்துரைக்கிறது. அதேபோல், சென்ற நூற்றாண்டிலிருந்து இன்று வரை இந்திப் பகுதிகளில் நிலவி வரும் அரசியல், பண்பாட்டுச் சூழலை அவர் விவரிக்கையில் பீதியும் அச்சமும் நம் உள்ளத்தில் தோன்றி, ‘நல்ல வேளையாக’ நாம் தமிழ்நாட்டில் பிறந்திருக்கோமே என்று ஆறுதல் கொள்ளவைக்கிறது.

**வி.ஹெச்.பி. அமைப்புக்கு அடித்தளமிட்ட பனியா**

இந்து மகாசபைத் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் ஆகியோரின் கருத்துகளைப் பரப்புவதில் ‘கல்யாண்’ தீவிரமாகச் செயல்பட்டது. விஷ்வ ஹிந்த் பரிஷத்தை உருவாக்குவதில் முக்கிய பாத்திரம் வகித்த போத்தாரின் கீதா பிரஸ்தான் இதற்கான வெள்ளோட்டமாக இந்துத்துவப் பார்ப்பனியக் கருத்துகளை வெளிநாட்டுவாழ் இந்துக்களிடம் பரப்புவதற்காக 1934இல் ‘கல்யாண்-கல்பதரு’ என்னும் ஆங்கில ஏட்டைத் தொடங்கியது.

**கடவுள் சந்தையிலும் பார்ப்பனருக்கு மேலிடம்**

ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக்கொண்ட வண்ண அச்சுத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்துக்களின் பல்வேறு கடவுள்களின் படங்களை அச்சிட்டு நாடெங்கிலும் விற்பனை செய்தது கீதா பிரஸ். இந்துக் கடவுள்களுக்கென 20ஆம் நூற்றாண்டு வரை சிலைகள் மட்டுமே இருந்த நிலையில் பலதரப்பட்ட ஓவியர்களை – இதில் ஓரிரு முஸ்லிம்களும் அடங்குவர் – ஊதியத்துக்கு அமர்த்தி, அவரவர் கற்பனைத் திறன்களுக்கேற்ப இந்து ஆண், பெண் கடவுள்களின் ஓவியங்களை வரையச் செய்து அவற்றை அச்சுக்குக் கொண்டுவந்ததன் மூலம் கீதா பிரஸ், கடவுள்களின் சிலைகளைத் தொடுவதற்கு உரிமை இல்லாத சூத்திர, தலித் சாதிகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலும்கூட படங்கள் மூலமாக கடவுள்களை வைத்துக்கொள்ளும் ‘மகத்தான’ காரியத்தைச் செய்தது. ஆயினும், “பிராமண மேலாதிக்கத்தைக் காட்டும் விதமாகவே ஓவியங்கள் அமைந்திருந்தன. காட்டாக, ஒரு பிராமணன் கடவுளைத் தரிசனம் பண்ணிக் கொண்டிருப்பதான ஒரு படத்தின் கீழ்ப் பகுதியில் சண்டாளன் ஒருவன் திகிலுடன் நடுங்கிக் கொண்டிருப்பதாகவும் காட்டப்பட்டிருந்தது.”

**இறப்புச் செய்திகளில் இடம் பெறாத காந்தி**

நேரு மீது கடும் வெறுப்புக்கொண்டிருந்த போத்தாரின் ‘கல்யாண்’ ஏடு, அவர் இறந்தபோது இரங்கல் கட்டுரையை வெளியிட்டதற்குக் காரணம், நேரு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் என்பதும் மக்களிடையே செல்வாக்குப் படைத்த தலைவராக இருந்தவர் என்பதும்தான். இந்திரா காந்தி கொலையுண்டபோது ’கல்யாணி’ல் இரங்கல் கட்டுரைகள் வெளிவந்ததற்குக் காரணம், ‘இஸ்லாமிய’ பாகிஸ்தான் ராணுவத்தைத் தோற்கடித்து ‘பங்களா தேஷ்’ உருவாகக் காரணமாக இருந்த அவரை இந்துத்துவவாதிகள் துர்கையுடன் ஒப்பிட்டுப் பேசி வந்ததுதான். ஆனால், இந்திரா காந்தி ‘அவசர நிலை’யைப் பிரகடனப்படுத்தியபோது வாயை மூடிக்கொண்டிருந்தது ‘கல்யாண்’.

அது மட்டுமல்ல, காந்தியின் இறப்புச் செய்தியையோ, இரங்கல் குறிப்பையோ வெளியிடாத ஒரே பத்திரிகையாகவும் அது இருந்திருக்கிறது. காந்தி கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவர்களிலொருவர் போத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**பசுப் பாதுகாப்பு**

பசுப்பாதுகாப்புக்கான இயக்கத்தில் போத்தார் ஆற்றிய பங்கு கணிசமானது. இதன் பொருட்டு ‘கல்யாண்’ ஏடு, ‘கெள அங்க்’ என்ற 633 பக்கங்கள் கொண்ட சிறப்பிதழைக் கொண்டு வந்தது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கட்டுரைகள் எழுதிய உயர் கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்தியவியலாளர்களும் பழங்கால இந்தியாவில் பசுவைப் பலியிடுவதும்,அதன் இறைச்சியை உண்பதுமான வழக்கம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது நடைமுறையாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய போதிலும் போத்தார் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். காங்கிரஸில் இருந்த பழைமைவாதக் குழுவைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப் பந்த் , மாளவியா முதலியோரின் கட்டுரைகளுடன் சங்கராச்சாரியார்கள் போன்ற ‘துறவிகளின்’ கட்டுரைகளும் அந்த சிறப்பிதழில் இருந்தன. காங்கிரஸ் தலைவர் பட்டாபி சித்தாரமையா “கோ மாதா, பூமி மாதா, கங்கா மாதா ஆகிய மூன்று மாதாக்களால் இந்துஸ்தான் வணங்கப்பட்டது” என்று எழுதினார்.

காஞ்சி சங்காராச்சாரியார் (பின்னாளில் ‘பரமாச்சாரியார்’), இரண்டாம் உலகப் போரின் பின்விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பசுவும் அது வெளியேற்றும் கழிவுகளும் தீர்வாகும் என்றும், பாலில் உள்ள மருத்துவத் திறன் அந்தப் போருக்குப் பின் பரவிய கொள்ளை நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் என்றும் கூறி தமது பொருளாதார, அறிவியல் ’அறிவை’ வெளிக்காட்டினார். பசுப் பாதுகாப்புக்காக சில முஸ்லிம் அறிஞர்களின் உதவியையும் ‘கல்யாண்’ பெற்றுக்கொண்டது. பசுவை வெட்டுவதற்கு ஆதரவான கருத்தை குரானோ, முகமதுநபியோ ஒரு போதும் கூறியதில்லை என்று அவர்கள் கூறும்படி செய்தார் போத்தார்.

**காமராசர் இல்லத்தின் மீது தாக்குதல்**

பசுப்பாதுகாப்புக்காக ஒன்றிய அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றி (இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றக் கடைசிவரை உறுதியாக மறுத்தவர் ஜவகர்லால் நேரு. ஆனால், அவர் மறைந்ததற்குப் பிறகு தற்காலிகப் பிரதமராக இருந்த குல்ஸாரிலால் நந்தா, பிரதமர் பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இந்துப் பழைமைவாதிகள்; போத்தாரின் நண்பர்கள்), அதை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் திணிப்பதற்கான போராட்டத்தை ஆர்எஸ்எஸ், ராம் ராஜ்ய பரிஷத், இந்து மகாசபா முதலிய தீவிர வலதுசாரி அமைப்புகளை ஒன்றிணைத்து, நூற்றுக்கணக்கான அம்மண (நாக) சாமியார்களையும் திரட்டி டெல்லி நாடாளுமன்றக் கட்டடம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை 1966ஆம் ஆண்டில் நடத்துவதற்கு போத்தார் முக்கியப் பங்களிப்புச் செய்தார். ஜனசங்கத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வெறிப்பேச்சால் தூண்டப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது பெரும் தாக்குதல் நடத்தினர். அப்போது அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசரின் வீட்டைத் தாக்கி அங்கிருந்த இல்லப் பணியாளர்களைத் தாக்கிக் காயப்படுத்தினர். நூலாசிரியர் குறிப்பிடாத செய்தி என்னவென்றால், அந்தக் கொலைவெறிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் காமராசர் வீட்டுக்குத் தீ வைத்தனர். அந்த சமயத்தில் காமராசர் வேறு எங்கோ சென்றிருந்ததால் உயிர் பிழைத்தார். அந்தக் கலவரத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்; பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்; ஏராளமான மோட்டர் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறை கண்டு வருந்துவதாக முதலைக் கண்ணீர் விட்ட போத்தார், சிறையிலிருந்த இந்து மத வெறியர்களுக்கு உதவி செய்து வந்தார்.

**சோசலிசத்துக்கு எதிரான கருத்துப் போரும் பெண்ணடிமைத்தனக் கருத்துகளும்**

பொதுவுடைமை, சோசலிசக் கருத்துகளுக்கு எதிரான பிரசாரத்தையும் போத்தாரும் அவரது ‘கல்யாண்’ ஏடும் தொடர்ந்து நடத்தின. சோவியத் யூனியனில் இருந்த கூட்டுறவு சங்கங்களை ஒத்தவைதான் இந்தியாவிலுள்ள கூட்டுக் குடும்பங்கள் என்றும், பகவத் கீதையே பொதுவுடைமைக் கொள்கையைப் பறைசாற்றும் நூல் என்றும் கூறும் கட்டுரைகளை ‘கல்யாண்’ வெளியிட்டது. தனிச்சொத்தை ஒழிப்பது முடியாத காரியம் என்றும் இந்து வருண அமைப்பு, கூட்டுறவுத் தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்கி வருகிறது என்றும் ‘கல்யாண்’ கட்டுரைகள் கூறின. ‘கல்யாணி’ன் போற்றுதலுக்குரிய கற்பத்திரி என்ற இந்து வெறி சாமியார், கம்யூனிஸம் என்பது பெண்களையும் பொதுவுடைமையாக்கும் தத்துவம் என்று எழுதினார்.

அதேபோல் இந்திய அரசின் மதச்சார்பற்ற கொள்கையையும் ‘கல்யாண்’ ஏடு தொடர்ந்து எதிர்த்து வந்தது. இந்தியாவிலுள்ள எல்லா இந்துக்களுக்கும் காலங்காலமாக ஒரே வழிபாட்டு முறை, ஒரேவிதமான சடங்குகள், ஒரேவிதமான ஒழுக்க நெறிகள் இருந்துவந்தன என்று கூறுவதற்காக உபநிடதங்கள், புராணங்கள், மத நூல்கள் ஆகியவற்றிலுள்ள கருத்துகளைத் திரித்துக் கூறும் லட்சக்கணக்கான குறும்பதிப்புகளையும் கட்டுரைகளையும் கீதா பிரஸ்ஸும் ‘கல்யாண்’ ஏடும் வெளியிட்டு வந்தன. இந்துப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் போத்தாரும் ‘கல்யாண்’ ஏடும் கூறிவந்த அறவுரைகள், ‘அவர்களை மத்திய காலத்துக்கு அழைத்துச் செல்லக்கூடியவை. அவரது அறிவுரையைப் பின்பற்றினால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள குடும்பப் பெண்கள் ‘ சல்வார் கமிஸ்’ உடையைக்கூட அணிய முடியாது. ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் போற்றுதலுக்குரிய நெறிகளாக ஆக்கினார் போத்தார்.

**பனியா பரிந்துரைத்த ஆரியவர்த்தா**

இந்தியா சுதந்திரமடையும் தருவாயில் போத்தார் காங்கிரஸ், இந்து மகாசபை, சமணர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு விடுத்த வேண்டுகோளில் இருந்த அம்சங்களில் ஒன்றிரண்டை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும்.

(1) இந்தியாவை இந்துஸ்தான் அல்லது ஆரியவர்த்தா என்று பெயரிட்டு அழைக்க வேண்டும்.

(2) அது தூய இந்து நாடாகவும் முற்றிலும் இந்துப் பண்பாடு அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டும். தேசியக் கொடி காவி நிறத்திலும், வந்தேமாதரம் நாட்டுப் பண்ணாகவும் இருக்க வேண்டும்.

(3) அடிப்படைக் கோட்பாடு என்ற வகையில் பசுவதை தடை செய்யப்பட வேண்டும்.

(4) உயர் பதவிகளில் இஸ்லாமியர்களை அமர்த்தக் கூடாது.

(5) சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் எந்த மதத்தின் மீதும் சட்டம் இயற்றக் கூடாது.

தன்னை மனிதநேயராகக் காட்டிக்கொள்ள இந்த வேண்டுகோளில் கீழ்க்கண்டவற்றையும் சேர்த்துக் கொண்டார் போத்தார்: “இந்தியாவில் இஸ்லாமியர் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு போதுமான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவர்களது வாழ்வும் மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

போத்தாரின் வாழ்க்கையில் நிறைந்திருந்த கபடத்தனம், மற்றவர்களுக்கு ஒழுக்கம் போதித்த அவர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த ஒழுக்கக்கேடுகள், உலகியல் வாழ்க்கையை ‘வெறுத்த’ அவர், பனியா முதலாளிகளின் ஊழல்களை மூடி மறைக்கவும், அவர்களது குடும்ப, சொத்துத் தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் மேற்கொண்ட செயல்பாடுகள் ஆகியவற்றையும் அக்‌ஷய முகுல் எடுத்துக்கூறுகிறார்.

சங் பரிவார பார்ப்பனிய பாசிசத்துக்கு வேண்டிய கருத்து சாதனங்களைத் தயாரித்து வழங்கியதில் சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்களையும் விஞ்சக்கூடியவராக இருந்தவர் போத்தார் என்பதை முகுலின் நூலிலிருந்தே முதன்முறையாகத் தெரிந்துகொள்கிறோம்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

[சிறப்புக் கட்டுரை: பகவத் கீதை – இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்!](https://minnambalam.com/public/2019/12/17/95/bagavath-geetha-revolution-and-anti-revolution-svrajadurai-article)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share