இந்திய பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியடையும் – ஆசிய வளர்ச்சி வங்கி

Published On:

| By admin

இந்தியாவின் பொருளாதாரம் 2022 ஆம் நிதியாண்டில் 7.5% வளர்ச்சியடையும் என்றும், அடுத்த 2023 ஆம் நிதியாண்டில் 8% வளர்ச்சியடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியானது, அதன் உள்கட்டமைப்பில் பொது முதலீட்டை அதிகரித்தால் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும். மேலும், தனியார் முதலீடு அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரம் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணத்தினால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளப்பட்டு இது கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா நிலையான பொருளாதார மீட்சிக்கான பாதையில் உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் கொள்கை, தொழில்துறை உற்பத்தியை எளிதாக்குவதற்கான ஊக்கத்தொகை, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை நாட்டின் விரைவான மீட்சிக்கு துணைபுரியும். அடுத்த 2 ஆண்டுகளில், நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள பெரிய பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் காரணமாக, அதிக அளவில் தனியார் முதலீட்டை இது ஊக்குவிக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளுக்கு மத்தியில் பணவீக்கம் 2022 ஆம் நிதியாண்டில் 5.8% ஆக அதிகரிக்கும். மேலும், 2022-23 காலகட்டத்தில் ஏற்பட்ட நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தற்போதைய நிதிப்பற்றாக்குறை 2.8 சதவீதம் ஆக விரிவடைந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 1.9 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிப்பு காரணமாக இருக்கும்.

இந்நிலையில், நாட்டில் பருவ நிலை சீராக இருக்கும் பட்சத்தில், விவசாய உற்பத்தி அதிகரிக்கும், விவசாயிகளின் வருமானம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share