ஜெயலலிதா மரணத்திற்கு காரணம்: ஸ்டாலின் சொல்லும் நபர்!

Published On:

| By Balaji

ஜெயலலிதா மரணத்திற்கு திமுகதான் காரணம் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று (அக்டோபர் 19) மாலையுடன் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப் படுத்தியுள்ளனர்.

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “ஜெயலலிதா மீது நாங்கள் சொத்துக்குவிப்பு வழக்கு போட்டதாகவும், அதனால்தான் அவர் சிறை சென்றார், மரணமடைந்தார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கதைவிட்டுக் கொண்டிருக்கிறார். வழக்குப் போட்டது உண்மைதான். ஆனால், திமுக வழக்கு போடவில்லை. 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தாக்கல் செய்தது சுப்பிரமணியன் சுவாமிதான். அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது” என்று விளக்கியவர்,

திமுகதான் காரணம் என்றால் எங்களை கண்டறிந்து தண்டனை கொடுத்திருக்க வேண்டியதுதானே. பிறகு ஏன் ஜெயலலிதா மரண மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். என்ன வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள். ஜெயலலிதா மரணத்திற்கு அப்போதைய திமுக தலைவர் கலைஞரும், இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலினும்தான் காரணம். அவர்கள் போட்ட பொய் வழக்கின் காரணமாக சிறை சென்ற ஜெயலலிதா, மன உளைச்சலின் காரணமாக துன்பப்பட்டு மரணமடைந்தார்” என்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், இவ்வாறாக பதிலளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share