கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உத்தரவு!

Published On:

| By Balaji

கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையிலிருந்து வந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூட்டுறவுச் சங்கங்களின் சார்பில் சிறப்பு அரசு பிளீடர்கள் பால ரமேஷ், எல்.பி.சண்முக சுந்தரம், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் தற்காலிகமாகப் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவுச் சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடராத அனைத்து கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டு, நிரந்தர ஊழியர்களாக நியமிக்கும் பணிகளை 8 வாரங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share