சென்னையில் பத்மாவதி கோயில்: 30 கோடி ரூபாய் இடத்தை வழங்கிய நடிகை காஞ்சனா!

public

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்குக் கோயில் கட்ட சென்னை ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 30 கோடி ரூபாய் பெறுமானமான நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமான அந்த இடத்தை நன்கொடையாக அவர் வழங்கியுள்ளார்.

சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. இதேபோல திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோயிலையும் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.

தற்போது ஜி.என்.செட்டி ரோட்டில் கோயிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும். அதை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.

மொத்தம் 14,880 சதுர அடியில் ரூ.6 கோடியே 85 லட்சம் செலவில் கோயில் கட்டப்பட உள்ளது. கட்டுமானங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ராஜகோபுரம், பிராகாரம், முகாம் மண்டபம் என கோயிலை கட்ட இருக்கிறார்கள்.

கோயிலுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவாகும் என முதலில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் அலங்கார செங்கல் கொண்டு கட்டுவதாக முடிவு செய்து இருந்தனர். அதன் பிறகு ஹைதராபாத், குருஷேத்ரா ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கோயில் போல கிரானைட் மூலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அதன் மதிப்பீடு தொகை ரூ.6 கோடியே 85 லட்சமாக உயர்ந்துள்ளது.

அவற்றுக்கான பணத்தை திருப்பதி தேவஸ்தான விதிகளின்படி நன்கொடையாக பெற உள்ளனர். ராஜகோபுரம் மட்டுமே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட இருக்கிறது.

30 கோடி ரூபாய் இடத்தை நன்கொடையாக வழங்கியுள்ள நடிகை காஞ்சனா, கடைசியாக தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனுக்குப் பாட்டியாக நடித்திருந்தார். இவர் ஏற்கனவே 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *