பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் பெல்ட், நகைகள், ஷூ, அதிகம் உயரம் கொண்ட செருப்பு போன்றவை அணியக் கூடாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
2017-18ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததையடுத்து, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 28 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஹால் டிக்கெட்டில் தேர்வின்போது தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில், தேர்வர்களுக்கான தேர்வு மையம், மாவட்டம் போன்றவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கைப்படி குலுக்கல் முறையில் நடைபெறும். ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துக்குள் ஹால் டிக்கெட், ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தேர்வு மையத்துக்கு வர வேண்டும்.
தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதானப்பொருட்கள், கைபேசி, மைக்ரோ போன், கால்குலேட்டர், மடிக்கணினி, பேஜர், டிஜிட்டல் டைரி போன்ற மின்சாதனப் பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
தேர்வு மையத்திற்குள் பெல்ட், நகைகள், ஷூ, அதிக உயரம் கொண்ட செருப்பு(ஹீல்ஸ்) போன்றவை அணியக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். தேர்வு மையத்திற்குள் நுழைவுச் சீட்டினை தவிர வேறு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
தேர்வின்போது யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், வரும் காலத்திலும் தேர்வெழுத முடியாத வகையில் துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வினை ரத்துச் செய்யும் அதிகாரம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்ததால், தற்போது நீட் தேர்விற்கு போன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
**-வினிதா**
�,