ஈரோடு அருகே தொழிற்சாலை ஒன்றில் குளோரின் வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் நிறுவன உரிமையாளர் உயிரிழந்ததையடுத்து, மயக்கமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ராயப்பாளையத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் கோவை சேலம் நெடுஞ்சாலை சந்தைப்பேட்டையில் ஸ்ரீதரன் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் குளோரின் வாயு விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மிகப்பெரிய கலனில் சேமிக்கப்பட்ட குளோரின் வாயு சிறிய கலன்களுக்கு மாற்றும் பணி நடந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் குளோரின் வாயு கசியத் தொடங்கியது. ஆலை முழுவதும் குளோரின் வாயு பரவியதால் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மயக்கமடைந்தனர். குளோரின் வாயு அருகில் இருந்த தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து தொழிற்சாலைக்குள் சென்று வாயுவின் வீரியத்தைக் குறைத்தனர். பின்பு மயக்கமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஆலையின் உரிமையாளர் தாமோதரன் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு நேரில் வந்த ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
ஆலையில் குளோரின் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**-வினிதா**
�,