g20 தொகுதிகளிலும் வெல்வோம்: ஜெயக்குமார்

Published On:

| By Balaji

20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளார்.

பள்ளிக்கரணையில் இன்று (நவம்பர் 1) நடைபெற்ற அசாம் விருந்தினர் மாளிகை கட்டட திறப்பு விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசும்போது, அசாமில் இருந்து படிப்பிற்காக தமிழகம் வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் மருத்துவ தேவைகளுக்காக தமிழகம் வரும் அசாம் மாநிலத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜெயக்குமார், அசாம் மாநில மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மெடிக்கல் எமர்ஜென்சி அறிவிக்க வேண்டிய தேவையில்லை. 77ஆம் ஆண்டு எமர்ஜென்சியை மனதில் வைத்து ஸ்டாலின் பேசுகிறார்.

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதைப்போன்ற குழப்பமான நிலைக்கு தினகரன் சென்றுள்ளார். தேர்தல் எப்போது நடைபெற்றாலும் சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது. தேர்தலை சந்திக்கும் திராணி எங்களுக்கு உள்ளது. 20 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுத் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தம்பிதுரை இடையேயான வார்த்தை மோதல் குறித்த கேள்விக்கு, “திமுக தங்களுக்கு பங்காளி என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். எங்களுக்கு திமுக பகையாளி. திமுக சந்தர்ப்பவாத கட்சி. எது எப்படியிருந்தாலும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.” என்று பதிலளித்தார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முழுமையான அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share