}சபரிமலை: பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டார்களா?

Published On:

| By Balaji

சபரிமலைக்குச் செல்ல முயன்ற 10 பெண்களை போலீசார் இன்று தடுத்து நிறுத்தியதாகத் தகவல் வெளியானது. இதனால் இன்று மதியம் முதல் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி மாற்றியது. அதோடு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை யார் மீறுகிறார்களோ அது பிரதமராகவே இருந்தாலும், முதல்வராக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் தாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும் மேற்கொண்ட உறுதிமொழிகளை மீறுகிறவர்கள் ஆவார்கள் என்று நீதிபதி நாரிமன் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்,

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கார்த்திகை மாத மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் சென்றுள்ளனர். கோயிலுக்குச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான பெண்களும் ஆன்லைனில் புக் செய்துள்ளனர். பெண்கள் நல ஆர்வலரான திருப்தி தேசாய், கேரள அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றாலும் 20ஆம் தேதிக்கு மேல் நிச்சயம் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாமியைத் தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து 10 பெண்கள் மற்றும் ஆண்கள் குழு சபரிமலைக்கு வந்ததாகவும், அவர்களில் பெண்களை மட்டும் போலீசார் திருப்பி அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின. குறிப்பாகப் பெண்கள் 50வயதுக்குட்பட்டு இருந்ததால் அவர்களுக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்ததாகச் சொல்லப்பட்டது.

ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பம்பை காவல்நிலைய அதிகாரிகள், ” பெண்களுக்குக் காவல் துறையினர் அறிவுரை வழங்கினர் அல்லது திருப்பி அனுப்பினர் என்பதில் உண்மையில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும், சபரிமலை கட்டுப்பாடுகள் குறித்தும் அனைவருக்கும் தெரியும். எனவே ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமில்லை. நோ எண்ட்ரி பாயிண்டுக்கு வந்தவுடன் அவர்களாகவே திரும்பிச் சென்றனர்” என்று தி நியூஸ் மினிட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதையொட்டி, சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பம்பைக்குள் தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் வாகனங்களுக்கு நிலக்கல்லில் பார்க்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

முன்னதாக, ”பிரச்சினை ஏற்படாமல் இருக்கப் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை” என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார். நீதிமன்ற உத்தரவுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் திருப்தி தேசாய் உள்ளிட்ட சில தனிநபர்கள், தங்களது பலத்தை நிரூபிக்கும் இடமாக, சபரிமலையைக் கருத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share