gமருத்துவச் சேர்க்கை முடங்கும் அபாயம்!

public

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நீட் விலக்குச் சட்டத்திற்கோ அல்லது ஓராண்டு விலக்கு அளிப்பதற்கான தற்காலிக அவசரச் சட்டத்திற்கோ மத்திய அரசின் ஒப்புதலை வழங்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 09) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் அனைத்து வழிகளிலும் எடப்பாடி அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்து விட்டது. மற்றொரு புறம் மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறைவு செய்வதற்கான காலக்கெடு சில நாட்களில் முடிவடைய இருப்பதால் மருத்துவம் படிக்க விரும்பிய தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டன. இப்போதைய நிலையில் தமிழகத்தின் முன் உள்ள இரு வாய்ப்புகள் என்னவெனில், நீட் தேர்விலிருந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு கோரும் அவசரச் சட்டத்தை பிறப்பிப்பது, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தின் தடையைப் பெறுவது ஆகியவைதான். ஆனால், இந்த இரு வாய்ப்புகளிலும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவாக உள்ளது என்பது தான் கசப்பான உண்மை.

இதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டிருக்கும்போதிலும் சாதகமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழகத்தின் சார்பில் உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதே ஐயமாக உள்ளது. ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய உள்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்கள்தான் அனுமதி தர வேண்டும். அதனால் அத்துறை அமைச்சர்களை விஜயபாஸ்கர் சந்தித்திருக்க வேண்டும்.

ஆனால், அவரோ தேவையில்லாமல் முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சரும், இப்போதைய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமனை தினமும் சந்தித்துப் பேசிவருகிறார். இது நீட் விலக்குக்காக நடத்தப்படும் சந்திப்பாகத் தெரியவில்லை. மாறாக, வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையிலிருந்து தப்பிப்பதற்கு உதவி கோருவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பாகவே தோன்றுகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதே தெரியவில்லை. ஒருவேளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும் கூட அதில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இவை ஒருபுறமிருக்க மருத்துவப் படிப்புக்கான அனைத்து மாணவர் சேர்க்கையையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடிக்காவிட்டால் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் காலியிடங்கள் என அறிவிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் அறிவித்துள்ளன.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நீட் தொடர்பான இன்னொரு வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இத்தகைய சூழலில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று இம்மாதத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்யாவிட்டால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 100% இடங்களும் காலியிடங்களாக அறிவிக்கப்படும் ஆபத்து உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளித்து, மாணவர்களின் நலன்களை எவ்வாறு காப்பாற்றப்போகிறது என்பதைத் தமிழக அரசு விளக்க வேண்டும்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கோ அல்லது ஓராண்டுக்கான தற்காலிக அவசரச் சட்டத்திற்கோ மத்திய அரசின் ஒப்புதலை வழங்கும்படி வலியுறுத்த வேண்டும். அது மட்டுமின்றி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க உச்ச நீதிமன்ற அனுமதியையும் பெற வேண்டும்.”

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *