gஸ்டாலினுடன் சுதாகர் ரெட்டி சந்திப்பு!

Published On:

| By Balaji

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, “வரும் காலங்களில் மதச்சார்பற்ற அணியை உருவாக்குவதில் திமுக முக்கியப் பங்கு வகிக்கும்” என்று தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதுமுள்ள மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்டாலினைச் சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி சென்னை வந்த மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொடர்பாக விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்க முடிவு செய்துள்ளோம். சிறப்பான இந்தியாவை உருவாக்கவே திமுகவுடன் கூட்டணி அமைக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் நேற்று (நவம்பர் 20) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர். சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, “நாட்டின் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து ஸ்டாலினுடன் விவாதித்தோம். தற்போதைய சூழலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே தளத்தில் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை பாஜகவிடமிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.மதச்சார்பற்ற அணியை உருவாக்குவதில் திமுக முக்கியப் பங்கு வகிக்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share