gவிற்பனைக்கு வரும் மூன்று நிறுவனங்கள்!

Published On:

| By Balaji

2019 – 2020 நிதியாண்டு முடிவதற்குள் ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்களை விற்க அரசு இலக்கு வைத்துள்ளத்தாக நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.

1932 ஆம் ஆண்டு டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின், இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமாக மாறியது ஏர் இந்தியா. 1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் பெரும் கடன் சுமையில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று(செப்டம்பர் 23) நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் “2020 மார்ச் மாதத்திற்குள் இரண்டு அல்லது மூன்று அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை, உள்ளூர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க இந்தியா இலக்கு வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், தளவாட நிறுவனமான கன்டெய்னர் கார்ப் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களை விற்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்துடன் கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் 2019 – 2020 நிதியாண்டு முடிவதற்குள் விற்க அரசு முடிவெடுத்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்ற மாதம், எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருந்த 4500 கோடி ரூபாய் கடன் பாக்கியை செலுத்தாததால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகம் செய்ய மறுத்தன. இதனால், ஏர் இந்தியா விமானங்கள் 2 வாரங்களுக்கும் மேல் விமான நிலையங்களில் நிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது நினைவில் இருக்கலாம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share