பிரதமர் மோடியும்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே சமயத்தில் கேரளா சென்றது, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், வாரணாசியும் கேரளாவும் எனக்கு ஒன்றுதான் என்று மோடி கூறியுள்ளார். அதே வேளையில் மோடி விஷத்தைப் பரப்புவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கேரளாவிற்கு ஒரே சமயத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் பயணம் மேற்கொண்டனர். மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் இன்று (ஜூன் 8) காலை தரிசனம் செய்தார். , காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னை வெற்றி பெற செய்த வயநாட்டு மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
**வாரணாசியும் கேரளாவும் ஒன்று**
குருவாயூரில் சாமி தரிசனத்தை முடித்த பின், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ”பாஜக அரசு பாகுபாட்டைப் பார்க்காமல் அனைவருக்காகவும் பணி செய்யும்” என கூறினார். “இந்த தேர்தலில் நேர்மறை வெற்றி பெற்றது; எதிர்மறை தோற்றது. ஒட்டுமொத்த உலகமும் நமது ஜனநாயகத்தை கவனித்து வருகிறது. புதிய இந்தியாவை உருவாக்குவோம் என உறுதியளிக்கிறேன்” என்றார்.
மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கேரளாவில் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலையில், தனது சொந்த தொகுதியான வாரணாசி போன்று கேரளா நெருக்கமானது என்று கூறிய மோடி, ”பாஜகவை வெற்றி பெற செய்தவர்களும், வெற்றி பெறாமல் செய்தவர்களும் எங்களுடையவர்களே. இங்கு பாஜக தோற்று போய்விட்டதால்தான் எனது முதல் அரசியல் உரையைக் கேரளாவில் பேசுகிறேன் என நீங்கள் கேட்கலாம். ஆனால், எனக்கு வாரணாசியும் கேரளாவும் ஒன்றுதான்” என்றுள்ளார்.
**நிபா வைரசால் அஞ்ச வேண்டாம்**
நான் மக்களை வணங்குகின்றேன். மக்கள் எனக்குக் கடவுள் போல. நாட்டை உயர்த்த நான் இருக்கிறேன் என்று தெரிவித்த அவர், கேரளத்தைத் தாக்கிய நிபா வைரசை நினைத்து யாரும் அஞ்ச வேண்டாம். மத்திய அரசு, நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நிபா தாக்குதலில் இருந்து மீள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும். ஏழைகளின் சிகிச்சைக்காக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ உதவிக்காக ‘ஆயுஷ்மான் பரத் யோஜனா’ திட்டம் கொண்டுவந்துள்ளோம். கேரள அரசு இந்தத் திட்டத்தில் சேர மறுத்துவிட்டது. இதனால் இங்குள்ள மக்கள் அந்த திட்டத்தின் பலனைப் பெற முடியாது. எனவே, கேரள அரசு இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.
**விஷத்தை பரப்பும் மோடி; ராகுல்**
இதே வேளையில், வயநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய ராகுல் காந்தி, தேர்தல் முடிவிற்குப் பின் முதன்முறையாக மீண்டும் மோடியைத் தாக்கி பேசியுள்ளார். “தேசியளவில் நாம் வெறுப்பு அரசியலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டையும் மக்களையும் பிளவுபடுத்த மோடி வெறுப்பு அரசியலை பயன்படுத்துகிறார். அவர் விஷத்தைப் பரப்புகிறார். விஷத்துக்கு எதிராக நாங்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். பாதுகாப்பின்மையையும், பொய்யையும் அவர் பிரதிநிதித்துவம் படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
**காவலாளி திருடர்**
அப்போது அங்குக் கூடியிருந்த மக்கள் “சவுகிதார் சோர் ஹை” (காவலாளி திருடர்) என்று கோஷம் எழுப்பினர். இதற்கு “தேர்தலுக்கு பிறகு முதன்முதலாக நான் இந்த முழக்கத்தை கேட்கிறேன்” என்று நெகிழ்ச்சியடைந்த ராகுல் காந்தி, வயநாட்டு மக்களுக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்றார்.
கேரளாவில், களிக்காவு உட்படப் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ராகுல் காந்தியைச் சந்திக்க திரண்டிருந்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த போஸ்டர்களில், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், கட்சிக்கு நீங்கள் தேவை, எங்களை வழிநடத்துங்கள்” என்ற வாசகங்களும் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிந்தது. அதுபோன்று டீக்கடையில் தேநீர் அருந்தியது, சிறுவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டது, பொதுமக்களிடம் கைகொடுத்துப் பேசியது என ராகுல் காந்தியின் செயல்கள் கேரள மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
�,”