gரூ.8 கோடி மதிப்பில் காசோலைகள் பறிமுதல்!

Published On:

| By Balaji

திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8.75 கோடிக்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காகப் பறக்கும் படை நியமிக்கப்பட்டு 24மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“நேற்று(மார்ச் 14) திருப்பராய்த்துறை சுங்கச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த மகேந்திரா வாகனத்தைச் சோதனையிட்டபோது, 192 காசோலைகளில் கையெழுத்து போடப்பட்ட 8 கோடியே, 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் காசோலைகளும், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 70 லட்சம் மதிப்பிலும் கடன் உறுதி பத்திரங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதற்கு உரிய ஆவணங்கள் இல்லையென்பதால், காசோலைகளும், கடன் உறுதி பத்திரங்களும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கனகமாணிக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

அதுபோன்று, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள நாகதாசம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி வில்சன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியே காரில் வந்த நல்லாம்பட்டியைச் சேர்ந்த அருள்மணி என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.3.94 லட்சம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

ஏலச் சீட்டுக் கட்டுவதற்காகப் பணம் எடுத்துச் செல்வதாக அருள்மணி தெரிவித்தார். இருப்பினும், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பென்னாகரம் வட்டாட்சியர் சதாசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முறையான ஆவணங்களைக் காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை, கோட்டூர்புரம், அடையாறு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share