டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பணிக்காக இரவு பகலாக படித்து வருபவர்களை அது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வழக்கை கையிலெடுத்த சிபிசிஐடி பலரையும் கைது செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டிபிஐ அலுவலகத்தில் பணியாற்றிய ஓம்காந்தன் மற்றும் பாலசுந்தர் ராஜ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரித்த சிபிசிஐடி போலீசார், எழும்பூரில் நீதிமன்றக் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இருவரையும் ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் முக்கிய நபரான ஜெயக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தேடித் தேடி கைது செய்யப்பட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற இடமில்லை என்ற அளவுக்கு நடவடிக்கை இருக்கும். குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும். அரசுத் தேர்வுகளுக்கான இடைத்தரகர்கள் உள்ளிட்ட கறுப்பு ஆடுகள் முழுமையாகக் களையப்பட்டு, எதிர்காலத்தில் எந்தத் தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக யார் புகார் தெரிவித்தாலும் அதுபற்றி உடனடி விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.�,