தென் மாநிலங்களில் முதலீடுகளைக் குவிப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து தேக்கம் கண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக முதலீடுகள் குறைந்து வருகின்றன. இருப்பினும் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் முதலீடுகளுக்கான முன்மொழிதல்கள் இருமடங்காக அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் முதலீடுகள் இருமடங்கு அதிகரித்தும் கூட கர்நாடகா மற்றும் ஆந்திராவை விடத் தமிழ்நாடு பின்தங்கியே உள்ளது.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மகாராஷ்டிரா 275 திட்டங்களுக்கு ரூ.46,428 கோடி முன்மொழிதல்களைப் பெற்றுள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் கர்நாடகா 92 திட்டங்களுக்கு ரூ.83,236 கோடி முதலீட்டுக்கான முன்மொழிதல்களைப் பெற்றுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த முதலீட்டில் 25 விழுக்காடு முன்மொழிதல்களைக் கர்நாடகா பெற்றுள்ளது.
மற்றொரு தென் மாநிலமான ஆந்திரப் பிரதேசம் 117 திட்டங்களுக்கு ரூ.12,392 கோடி முன்மொழிதல்களைப் பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாடு ரூ.7,635 கோடி முதலீட்டுக்கான முன்மொழிதல்களை மட்டுமே பெற்றுள்ளது. கேரளாவும், தெலங்கானாவும் தமிழ்நாட்டைக் காட்டிலும் குறைவான முதலீடுகளை மட்டுமே பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் 1,486 திட்டங்களுக்கு ரூ.3.38 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் முன்மொழியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் முதலீடுகள் கடந்த ஆண்டின் (2017) 12 மாதங்களிலும் சேர்த்தே ரூ.3,131 கோடி மட்டுமே. ஆனால் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கிட்டத்தட்ட 144 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 62 திட்டங்களில் மட்டுமே முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் இதுவரையில் 64 திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.6,172 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து மெட்ராஸ் தொழில் துறை மற்றும் வர்த்தக சங்கத்தின் செயலாளர் கே.சரஸ்வதி *டி.என்.என்.* ஊடகத்திடம் பேசுகையில், “கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முதலீடுகள் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் மோசமான செயல்பாட்டிலிருந்து தமிழ்நாடு மீண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட நிச்சயமற்ற அரசியல் சூழலால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டதே முதலீடுகள் சரிந்ததற்கு முக்கியக் காரணமாகும்” என்றார்.�,