இந்த வருடம் இந்தியாவில் வாகன விற்பனை மந்தமானதும், அதன் விளைவாக முக்கியமான மோட்டார் வாகன நிறுவனங்கள் லே ஆஃப் எனப்படும் வேலையற்ற -சம்பளமற்ற தினம் என்று அறிவித்ததும் செய்திகளில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் இந்தியாவின் முக்கிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி , 2020 ஆம் ஆண்டிலிருந்து தங்கள் தயாரிப்பு கார்களின் விலை உயர்வு என்று அறிவித்திருக்கிறது. அந்நிறுவனம் இன்று (டிசம்பர் 3) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கார் உற்பத்திக்கான பல்வேறு பொருட்களின் விலையேற்றத்தால் மாருதி நிறுவனங்களின் கார்களுடைய உள்ளடக்க மதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், 2020 ஆம் ஆண்டிலிருந்து மாருதி நிறுவனத்தின் கார்களின் விலையேற்றம் இன்றியமையாதது ஆகிவிட்டது. ஜனவரி 2020 இலிருந்து மாருதியின் வெவ்வேறு மாடல் கார்களுக்கும் வெவ்வேறு அளவுகளில் விலை உயர்வு இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
மாருதி கார் நிறுவனம் தற்போது ஆல்டோ, வேகன் ஆர், செலிரியோ, எஸ்-ப்ரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசைர், விடாரா ப்ரிசா, எர்டிகா போன்ற பல்வேறு வகை கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 400 கார்களை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்திருக்கிறது.
2020 முதல் விலையேறும் என்று குறிப்பிட்டுள்ள மாருதி நிறுவனம் எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலையேறும் என்று குறிப்பிட்டுக் கூறவில்லை. எனவே டிசம்பர் மாத விற்பனையை அதிகப்படுத்துவதற்கான மாருதியின் பிசினஸ் மந்திரமாக இருக்கக் கூடுமோ என்று மோட்டார் வாகன வட்டாரத்தில் பேசப்படுகிறது.
�,