மறைந்த தலைவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 18) செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் அதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
திமுக தலைவர் கலைஞரின் இறுதி மரியாதைக்கு ஆட்சியாளர்கள் வராதது குறித்த கேள்விக்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குக்கு திமுகவிலிருந்து யாராவது வந்தார்களா என்று தம்பிதுரை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில் இரங்கல் தெரிவிக்கும் விவகாரம் ஏன் அரசியலாக்கப்படுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம்,
, “அரசியலாக்குவதற்கு பலர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் மறைந்த மாபெரும் தலைவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று குறிப்பிட்டார்.
வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அவர், “வெள்ள பாதிப்பை தடுத்து நிறுத்தும் வழிமுறைகளையும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அரசின் சார்பாக 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை முன்கூட்டியே விடப்பட்டுள்ளது. அங்கு அரசின் சார்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
காவிரி, வைகை கரையோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிபெருக்கிக் கொண்டு யாரும் கரையோரங்களில் நடமாடவோ, ஆற்றுப் படுகைகளில் இறங்கவோ வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரப்படும்” என்று தெரிவித்தார்.
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையான அளவுக்கு சென்றுவிட்டது என்றும் தெரிவித்தார்.
“தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து குமுளி செல்லும் சாலை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை பார்வையிட்டுள்ளேன். நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுவருகின்றன” என்றும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.�,