இதயமுடுக்கி இயந்திரங்களில் இதயத்தின் இயந்திர ஆற்றலை பயன்படுத்தி பேட்டரிகளை சார்ஜ் செய்ய ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதயத் துடிப்பில் கோளாறு இருப்பவர்களுக்கு துடிப்பை சீராக்குவதற்கு இதயமுடுக்கி (பேஸ்மேக்கர்) இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. இதயமுடுக்கி இயந்திரத்துக்கான பேட்டரிகளை மாற்றுவதற்காக இந்த இயந்திரம் பொருத்தப்பட்ட அனைவருமே ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு முறையும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமென்பது நோயாளிகளுக்கு மிகுந்த அவதியையும், வலியையும் ஏற்படுத்துகிறது. இவர்களுக்காகவே ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இருதயத்தின் இயக்க ஆற்றலையும், இயந்திர ஆற்றலையும் பயன்படுத்தி பேட்டரிகளை மாற்று வழியில் சார்ஜ் செய்ய ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
டார்ட்மவுத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் சிலர் மெல்லிய பாலிமரை பயன்படுத்தி இதயத்தின் இயந்திர ஆற்றலால் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முயற்சித்து வருகின்றனர். இது சாத்தியமானால் இதயமுடுக்கிகள் பொருத்தப்பட்டுள்ள நோயாளிகள் இனி ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு அவதிப்பட வேண்டிய கட்டாயம் இருக்காது. தற்போது இந்தக் கருவி சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி கருவியை உருவாக்கி வரும் ஆய்வாளர்களில் ஒருவர் பேசுகையில், “இயந்திரத்தின் திறனை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த இயந்திரம் விற்பனைக்கு வரும் என நம்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.�,