gபாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர்!

Published On:

| By Balaji

மீ டூ இயக்கத்தின் வீச்சு திரைத் துறை, இசைத் துறை, ஊடகத் துறைகளைத் தொடர்ந்து கல்வித் துறையிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் மீது ஆய்வு மாணவர் கொடுத்த பாலியல் புகார் காரணமாக இவருக்குப் பணியிலிருந்து கட்டாய ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

51 வயதான பேராசிரியர் கிரிதர் மதராஸ் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ரசாயனப் பொறியியல் பிரிவில் இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவந்த மாணவர் இவர் மேல் பாலியல் புகார் அளித்தார். அந்தக் கல்வி நிறுவனத்திற்குள் எழும் புகார்களை விசாரிக்கும் குழு இது தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் அடிப்படையில் நிறுவனத்தின் ஆட்சிக்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வாரம் இந்திய அறிவியல் கழகத்தின் பதிவாளர் வி.ராஜேந்திரன் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். தற்போது மத்திய அரசின் பணி விதிமுறைகள்படி இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிரிதர் மதராஸ் பற்றிய விவரங்கள் இந்திய அறிவியல் கழகத்தின் இணையதளத்திலிருந்து சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டது. இவர் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். ‘சாந்தி ஸ்வரூப் பாட்நகர்’ விருது உட்படப் பல விருதுகளைத் தனது ஆராய்ச்சிக்காகப் பெற்றுள்ளார். தற்போது பாலியல் புகார் காரணமாக இவர் பணியிலிருந்து கட்டாய ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேராசிரியர் கிரிதரிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் கருத்து கேட்க முயன்றும் பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ்.துர்கப்பா மீது மாணவர் ஒருவர் கூறிய பாலியல் புகார் காரணமாக அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share