gபாபநாசம் படத்தை மிஞ்சிய கோவை கொலையாளி

Published On:

| By Balaji

சிறுமி கொலை: குற்றத்தின் பின்னணி!

கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம், கடந்த ஏழு நாட்களாகத் தமிழகம் முழுவதையும் உலுக்கிவந்தது. இந்த வழக்கில் கோவை மாவட்ட போலீசார் நேற்று (மார்ச் 31) சந்தோஷ்குமார் என்பவரைக் கைது செய்தனர். வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை இவருக்குக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைதின் பின்னணியில் உள்ள சமூகச் சூழல், போலீசாரின் விசாரணை ஆகியவை குறித்து மின்னம்பலம் செய்தியாளர்களின் கள ஆய்வில் கிடைத்த விவரங்களை இங்கே தருகிறோம்…

கோவை மாவட்டம் துடியலூர் அருகிலுள்ள பன்னிமடை ஊராட்சியில் உள்ளது கஸ்தூரிநாயக்கன்பாளையம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 33) இவரது மனைவி பெயர் வனிதா (வயது 27). இவர்களுக்கு ஆறு வயதிலும் மூன்று வயதிலுமாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தை திப்பனூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.

அதீதமான குடிப் பழக்கம் கொண்ட பிரதீப், குருடம்பாளையம் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக உள்ளார். தெருக்களில் குப்பை எடுக்கப்போகும் நேரம் போக மீதி நேரமெல்லாம் குடித்துவிட்டுக் குப்பை மேட்டிலேயே படுத்துக் கிடப்பார். வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையோதான் வீட்டுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. கணவனை நம்பிப் பயனில்லை என்ற நிலையில், வனிதா தன்னுடைய பெற்றோர்களைக் கூட்டிவந்து தன்னுடனே வைத்துக்கொண்டார். அவர்கள் பொறுப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு, அன்றாடம் காலை எட்டு மணிக்கு பன்னிமடை பஞ்சாயத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் உற்பத்தியாகும் கொசு, புழுக்களை அழிக்க மருந்து ஊற்றும் வேலைக்குச் சென்றுவிடுவார்.

வேலை முடிந்து மதியம் இரண்டு மணிக்கு வருவார். மதிய ஓய்வுக்குப் பிறகு, இரவு ஏழரை மணிக்குப் பக்கத்தில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் துப்புரவுப் பணிக்குச் செல்வார். அங்கிருந்து அதிகாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வரும் வனிதா, மீண்டும் பஞ்சாயத்து வேலைக்கு ஓடுவார். இப்படித்தான் அவரது வாழ்க்கை நிகழ்ந்து வந்தது.

கடந்த 25ஆம் தேதியன்று காலையில் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார் வனிதா. தூங்கி எழுந்ததும், “பாப்பா எங்கேம்மா…?” என்று தன் அம்மாவைக் கேட்டுள்ளார். “வெத்தல பாக்கு வாங்கிட்டு வரச்சொல்லி கடைக்கு அனுப்பியிருக்கேன்” என்று வனிதாவின் தாய் கூறியுள்ளார். நெடுநேரமாகியும் கடைக்குப் போன பெண் குழந்தை திரும்பி வரவேயில்லை என்றவுடன், வனிதா பெட்டிக்கடைக்குச் சென்று குழந்தை பற்றி விசாரித்துள்ளார். அப்போது, குழந்தை கடைக்கு வரவில்லை என்று தெரிந்துள்ளது. இதையடுத்து, வனிதாவின் மனதில் பயம் உண்டானது.

வனிதாவுடன் சேர்ந்து அவருடைய பெற்றோர்களும், குழந்தையைத் தேடினார்கள். அக்கம்பக்கம் உள்ள வீடுகளில், தெருக்களில், ஊர் எல்லையில் உள்ள மாரியம்மன் கோயில் திடல், சத்துணவுக்கூடம் என எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தையைக் காணவில்லை.

இரவு 8 மணிக்கு பெரிய நாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி சுந்தரத்துக்கு ஒன்றாம் வகுப்பு மாணவியைக் காணவில்லை என்ற தகவல் போனது. விசாரணைக்காக போலீசார் ஊருக்கு வந்த பின்னர்தான், வனிதாவின் கணவரான பிரதீப்பும் வீட்டுக்கு வந்துள்ளார். நிற்க முடியாத போதையில் வந்தவர், வீட்டுக்கு வெளியிலேயே படுத்துவிட்டார்.

200 வீடுகளைக் கொண்ட கஸ்தூரிநாயக்கன்பாளையம் காலனி முழுவதிலுமே போலீசாரும் பொதுமக்களும் சேர்ந்து தேடிவிட்டனர். குழந்தையைப் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை. இரவுப் பணிக்கு போன போலீசார் பக்கத்தில் உள்ள ஊர்களில் எல்லாம் விடிய விடியத் தேடியுள்ளனர். காலை ஏழரை மணிக்கு வனிதாவின் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளியிருந்த கருப்பன் என்பவரின் வீட்டின் பின்பக்கம் உள்ள சந்தில், ஒரு டிசர்ட்டில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார்.

கை கால் எல்லாம் சிலிர்த்துப்போய் இருந்தாலும், தன் குழந்தைக்கு உயிர் இருக்கும் என்று நம்பிய வனிதா குழந்தையைத் தூக்கிக்கொண்டு துடியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். குழந்தையின் உடலை மேலோட்டமாகப் பார்த்தபோதே, கொடியவன் ஒருவனால் சிதைக்கப்பட்டது போலீசாருக்குத் தெரிந்துவிட்டது. இதையடுத்து துடியலூர் டிஎஸ்பி மணி குழந்தையின் உடலை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுபோகச் சொல்லி உத்தரவிட்டார். உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலீசார் குழந்தையின் உடலை ஆம்புலன்சில் கொண்டுசென்றனர்.

இதன் பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறுமியின் உடல் கிடந்த அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அக்கம்பக்கம் வீடுகளில் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். “நேத்து ராத்திரி அய்யம்மா கெழவி செத்துப்போச்சு, எல்லோரும் அங்கே போயிட்டோம். நடுச்சாமத்துக்கு மேலேதான் பொணத்தைக் கொண்டுபோயி பொதச்சுட்டு வந்தாங்க. அதுக்குப் பின்னாலே நாலு மணிக்குத்தான் ஊட்டுலே போயிப் படுத்தேன். வெடியக்காலேயிலே புள்ளே பொணம் கெடக்குதுன்னு சத்தம் கேட்டுதான் எந்திரிச்சு வந்து பார்த்தேன்.” என்றே எல்லா வீட்டிலும் பதில் கிடைத்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனையில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், பெண் மருத்துவர் என ஒரு மருத்துவக் குழு சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தியது. உடற்கூறு ஆய்வுகள் அனைத்தும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் எல்லாம் பதிவு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில், சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டது, பிறகு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது அனைத்தையும் மருத்துவர்கள் குழு கண்டுபிடித்தது.

கூடவே இன்னொரு அதிர்ச்சியான தடயமும் கிடைத்தது. அந்தக் குழந்தை பாலியல் உறவுக்குப் பயன்படுத்தப்பட்டது இது முதல்முறையல்ல என்பதுதான் அந்த அதிர்ச்சியான தடயம்.

பொள்ளாச்சியில் நடந்த கல்லூரி மாணவி பாலியல் சித்தரவதைக்கு உள்ளான செய்தி நெருப்பாய்ப் பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் மருத்துவர்கள் கொடுத்த இந்த அறிக்கை கோவை மாவட்ட போலீசாருக்கு பேரிடியாய் விழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன் இருவரும் எஸ்.பி. பாண்டியராஜனைக் கூப்பிட்டனர். “எந்தக் காரணம் கொண்டும், இந்த வழக்கு தொடர்பான சிறு துரும்புகூட வெளியே போகக் கூடாது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சொல்கிறோம். எல்லா இடத்திலும் நீங்களே முன்னால் இருப்பதுபோல பார்த்துக்கொண்டு, நாங்கள் சொல்வதை நீங்கள் உத்தரவாக போட்டுக் கொண்டிருங்கள்” என்று சொன்னதாகத் தெரிகிறது.

ஏ.டி.எஸ்.பிகள் மாடசாமி மற்றும் முருகசாமி, டி.எஸ்.பி. மணி, இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி சுந்தரம், மீனாம்பிகை, வினோதினி, உதவி ஆய்வாளர்கள் பிராங்கிளின், ரத்னகுமார், திலக், செந்தில்குமார், மனோஜ்குமார், முனியசாமி, நாகராஜ், கோமதி, பாக்யலட்சுமி, கனிமொழி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜகான், தலைமைக் காவலர்கள் ரஞ்சித்குமார், அய்யாச்சாமி, ஆனந்தீஸ்வரன், மோகனா, ஜோதி, கிருஷ்ணவேணி, நர்மதா, திலிபா போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய படை அமைக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட பெரியநாயக்கன் பாளையம் ஆய்வாளரும் போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் பயனுள்ள செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை எங்கிருந்து எப்படித் துவங்க வேண்டும் என இதன்பின்னர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் தீவிரக் கண்காணிப்பையும் மீறி சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக மருத்துவக் குழுவினர் கொடுத்த அறிக்கை ஊடகங்களுக்குச் சென்றது.

பொள்ளாச்சியில் பிடித்த நெருப்பு, காட்டுத் தீயாகத் துடியலூருக்குப் பரவியது. சிறுமி கொலை செய்யபட்டார் என்ற செய்தி தெரிந்தவுடன் கஸ்தூரிநாயக்கன்பாளையம் சென்றார் மாதர் சங்கச் செயலாளர் ராதிகா. இவரது தலைமையில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம். என அறிவித்தனர். கோவை அரசு மருத்துவமனையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமாதானம் செய்யப்போன போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

மறுநாள் காலை ஊர் மக்களுடன் துடியலூரில் சாலை மறியல் நடந்தது. இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் திமுக, விசிக, எஸ்டிபிஐ, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கை கோர்த்தன. காலை 10 மணிக்குத் துவங்கிய சாலை மறியல் மதியம் 1 மணி வரை நீடித்தது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். கோவை வடக்கு கோட்டாட்சியர் டெய்ஸி குமார், கோவை வடக்கு வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஏ.டி.எஸ்.பி. முருகசாமி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஊர் மக்கள் யாரும் அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் சாலை மறியல் தொடர்ந்தது. சிறுமியின் கொலை வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் என போலீசார் அறிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலைக்குள் வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, ஐந்து மணி நேர மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பிற்பகல் மாவட்ட ஆட்சியரைப் போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். நேர்மையான முறையில், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி கூறினார்.

உடற்கூறு ஆய்வு முடித்த சிறுமியின் உடல் பெறப்பட்டு கஸ்தூரி நாயக்கன்புதூரில் அடக்கம் செய்யப்பட்டது. சிறப்புப் படை போலீசார் ஊருக்குள் விசாரணை மேற்கொண்டனர். ஊரில் ஏதாவது ஒரு இடத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கும் என்று எண்ணத்தில் அங்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி. காலனி மக்கள் குடியிருக்கும் அந்தப் பகுதியில் எங்குமே கண்காணிப்பு கேமராவும் இல்லை. இரவு நேரங்களில் யார் போகிறார்கள் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரு விளக்கு வசதியும் இல்லை.

நாளொன்றுக்கு 16 மணிநேரமும் கூலி வேலைக்குப் போகும் வனிதாவுக்கும், தூங்கிய நேரம் போக மீதி 16 மணிநேரமும் போதையிலேயே இருக்கும் பிரதீப்புக்கும் தங்கள் மகள் யார் யாரிடம் பழகுவாள். எங்கே போவாள், எப்போது வருவாள் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. ஏற்கனவே சந்தேக வளையத்துக்குள் இருந்தவர்கள், போதை அடிமைகளாக இருந்தவர்களுமாக 7 பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

சிறுமியின் பெற்றோர்களுடன் கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் தங்கியிருந்த இந்திய மாதர் சங்கச் செயலாளர் ராதிகா, மாணவியின் தாய், அக்கம்பக்கம் வீடுகளில் உள்ள பெண்களிடம் பேசினார். விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் வீடுகளை எல்லாம் ஆய்வு செய்து அங்கு ஏதாவது தடயங்கள் கிடைக்குமா எனத் தேடியுள்ளனர். எதுவும் கிடைக்கவில்லை.

சிறுமியின் உடலைச் சுற்றியிருந்த டிசர்ட்டைக் கையில் எடுத்த போலீசார், அதை ஆய்வு செய்தனர். வழக்கமாகப் வெளியிடங்களுக்குப் போகும்போது பயன்படுத்துவதைப் போலல்லாமல் தச்சு வேலை, எலக்ட்ரிக் வேலை, பெயிண்டிங் வேலை ஆகிய பணிகளுக்குச் செல்வோர் வேலை இடங்களில் பயன்படுத்தும் பழைய மாற்றுத் துணியைப் போல அது இருந்தது. இதையடுத்து, சந்தேகப் பட்டியலில் இருந்த ஏழு பேரின் தொழில் முறையை விசாரித்துள்ளனர். அதில், இந்த டிசர்ட் மூன்று பேருக்கு மட்டும் ஒத்துவந்துள்ளது. ஏழு பேர் என்ற சந்தேக வளையம் மூன்றாகக் குறைந்தது.

பெண் போலீசார் மூலம், அந்த இரண்டு பேரின் வீடுகளைக் கண்காணித்து அவர்கள் பயன்படுத்தும் உடுப்புகளை பற்றி தரவுகள் சேகரிக்கப்பட்டது. அவர்களுக்கும் அந்த டிசர்ட்டுக்கும் தொடர்பில்லை எனத் தெரிய வந்தது. இரண்டு பேரின் பெற்றோர்களையும் கூட்டிக்கொண்டுபோன போலீசார் விசாரித்ததில் பயனுள்ள செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. சிறுமி கொலையான அன்று அவர்கள் இருவரும் விடியும் வரை வீட்டிலேயே இருந்துள்ளனர்.

சந்தேக வளையத்தில் இருந்த 6 பேர் விலகிவிட்ட நிலையில் இறுதியாக உள்ளே வந்தவர் தான் சந்தோஷ்குமார். தொண்டாமுத்தூர் அருகிலுள்ள உரியம்பாளையம் ஊராட்சி சித்திரைசாவடி என்ற இடத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன். இவரது பின்னணி பற்றி தெரிய வந்ததும் போலீசாரின் பிடி இறுகியது.

(மாலை 7 மணி் பதிப்பில் தொடரும்..)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share