கேரளாவில் பாஜக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கேரளாவில் ஆளும் சிபிஐ(எம்) கட்சிக்கும் பாஜவுக்கும் இடையேயான மோதல்கள் சமீப நாட்களாக அதிகரித்துவருகின்றன. பாஜகவினர் தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கண்ணூர் மாவட்டத்தில் சமீபத்தில் பேரணியை நடத்தினார். இதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். எனினும், இப்பேரணிக்குக் கேரள மக்கள் போதிய வரவேற்பை அளிக்கவில்லை.
இந்நிலையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கண்டித்து கண்ணூர் பானூர் பகுதியில் சிபிஐ(எம்) கட்சியினர் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். அப்போது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 13 பேர் மற்றும் 4 காவல் துறை அதிகாரிகள் காயமடைந்தனர். இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது .
இந்நிலையில், கண்ணூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் போலீசார் இன்று (அக்.10) அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், ஸ்டீல் குண்டு, உறைவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்துவதற்குத் திட்டமிட்டுத்தான் இந்த ஆயுதங்களை பாஜகவினர் தங்கள் அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கண்ணூர் மாவட்ட பாஜ தலைவர் பி. சத்திய பிரகாஷ் இதனை மறுத்துள்ளார். கட்சியின் பெயரைக் கெடுக்க இந்த ஆயுதங்களை இங்கே கொண்டுவந்து மறைத்து வைத்திருக்கலாம். மாவட்ட கமிட்டி அலுவலகத்தில் இத்தகைய ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.�,”