ஆவின் பால் விலை உயர்ந்த நிலையில் இன்று (செப்டம்பர் 15) அதன் உப பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுச் சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்டு, அது கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தப்பட்டது. ஆவின் பால் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தேநீர் கடைகளில் டீ, காபி விலையும் உயர்ந்தன. இன்று முதல் தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு ரூ.60 வரை உயர்த்தியிருக்கின்றன,. இந்நிலையில் ஆவின் உபபொருட்களின் விலையும் இன்று முதல் உயர்த்தப்படுவதாக, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, 460 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் விலை, தற்போது 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படும். ரூ.270ஆக இருந்த ஒரு கிலோ பால் பவுடரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ320ஆகவும், ரூ.400க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பனீரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். அதுபோன்று ரூ.460க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்ணையின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.480க்கும், ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ.500லிருந்து 520ரூபாயாகவும், ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் 26 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 30 ரூபாயாகவும், 22 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் நறுமண பால் 3 ரூபாய் உயர்த்தப்பட்டு 25 ரூபாய்க்கும் விற்பனையாகும். அரை லிட்டர் தயிர் 25 ரூபாயிலிருந்து 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 27 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம் பேசியுள்ள ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ், ”நெய், வெண்ணெய் மற்றும் பிறவற்றின் விலை உயர்வுக்கான மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பொருத்து ஐஸ்கிரீம் மற்றும் பிற பால் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் ” என்று கூறியுள்ளார்.
�,