gநம்பர் 1 வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Published On:

| By Balaji

இப்படி ஒரு தோல்வியை உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் எதிர்கொண்டிருக்கவேண்டாம். ரோம் மாஸ்டர்ஸ் கோப்பையின் இரண்டாம் சுற்று நேற்று (17.05.17) இரவு நடைபெற்றது.

மே 15ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடியபோது **வயது என்பது எண் மட்டுமே. திறமை என்பது உடலிலும் மனதிலும் இருக்கவேண்டும்** என்று சொல்லித் தனது ரோம் மாஸ்டர்ஸின் இரண்டாவது சுற்றை விளையாடிய உலகின் நம்பர் ஒன் வீரரான ஆண்டி முர்ரே, 29வது நிலை வீரரான ஃபேபியோ ஃபொனினி-யிடம் தோல்வியடைந்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற மேட்ரிட் ஓப்பன் போட்டியிலும் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியிருந்த முர்ரேவுக்கு, களிமண் ஆடுகளங்கள் மிகவும் பின்னடைவாக இருக்கின்றன. பார்சிலோனா மாஸ்டர்ஸ் போட்டியில் மட்டும் காலிறுதி வரை முன்னேறினாரே தவிர மற்றபடி மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் மற்றும், மேட்ரிட் மாஸ்டர்ஸ் ஆகிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது சுற்றிலேயே ஆண்டி முர்ரே வெளியேற்றப்பட்டார். இம்முறையும் அதேபோல இரண்டாவது சுற்றில் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறார். இந்த நான்கு ஆடுகளங்களும் களிமண் ஆடுகளங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கை மிகவும் நீளமான ஆண்டி முர்ரேவுக்கு வேகம் தான் மிகப்பெரிய பலம். ஆனால், அந்த வேகம் களிமண் ஆடுகளங்களில் எடுபடாது. எவ்வளவு வேகமாக அடித்தாலும் டென்னிஸ் பந்து தரையில் பட்டதும் தனது வேகத்தைக் குறைத்துக்கொள்ளும். இந்த ஆடுகளங்களில் வெற்றிபெற எப்போதும் ஸ்லைஸ், அல்லது அதிவேகமான பந்துகளையே விளையாடுவார்கள். ஆனால், முர்ரே ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமான சர்வீஸ்களால் அவரது சக்தியை இழந்துவிட, எவ்வளவு வேகமாக அடித்தாலும் பந்து ஃபேபியோவை சாதாரண வேகத்திலேயே சென்றடைந்தது.

நடாலைப் போலவே பேக்-ஹேண்ட் ஷாட்டில் பலமான ஃபேபியோ மிகவும் சாதாரணமாக ஸ்லைஸ் ஷாட்களை அடித்து முர்ரேவை மேலும் சோர்வடையச் செய்தார். பல பந்துகளை முர்ரே முயற்சி செய்யாமலே விட்டதைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தது. முதல் செட்டில் வேகமாக ஆடினார் முர்ரே என்பதற்கு, அந்த செட்டின் சர்வீஸில் 209 கி.மீ வேகத்தில் சர்வீஸ் செய்ததைச் சொல்லலாம். ஆனால் அந்த வேகம் எடுபடாமல் போனதால், 2-6 என்ற வித்தியாசத்தில் முதல் செட்டை பறிகொடுத்தார்.

இரண்டாவது செட்டில் ஃபேபியோவைப் போலவே தனது ஆட்டத்தை நிதானப்படுத்தினார். அதுவும் ஃபேபியோ 4-2 என முன்னிலை வகிக்கும்போது அந்த நிதானத்தைக் காட்டியதால் எக்ஸ்ட்ராவாக முர்ரேவால் சில பாய்ண்ட்களை எடுக்க முடிந்ததே தவிர, வெற்றிபெறும் அளவுக்கு அந்த வாய்ப்பு இருக்கவில்லை. அவசரத்தில் சில பாய்ண்ட்களை இழந்தாலும் பிறகு சுதாரித்துக்கொண்ட ஃபேபியோ, முர்ரேவை மீண்டும் ஓடவைத்தார். வழக்கம்போல சோர்வாகி முர்ரே பாய்ண்ட்களை இழந்து இரண்டாவது செட்டிலும் 6-4 என தோல்வியடைந்தார். இரண்டாவது சுற்று என்பதால் 3 செட்களை மட்டுமே கொண்டு விளையாடிய இந்த ஆட்டத்தில் மூன்றில் இரண்டை ஃபேபியோ வென்றதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோம் மாஸ்டர்ஸ் போட்டியை விட்டு முர்ரே வெளியேற்றப்பட்டார்.

வருகிற மே 28ஆம் தேதி தொடங்கப்போகிற பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியும் களிமண் ஆடுகளத்தில் நடைபெறும் என்பதால் முர்ரே தனது ஃபார்மில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment