gநடிகர்களைச் சாடிய ‘சந்திரமுகி’ நடிகை!

Published On:

| By Balaji

ஆடம்பரச் செலவு செய்யும் நடிகர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகச் சொற்ப நிதியை வழங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது” என்று நடிகை ஷீலா கூறியுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளப்பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களை அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை ‘செம்மீன்’ ஷீலா, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இவர் தமிழில் பாசம், பணத்தோட்டம், இதய கமலம், கற்பகம், சந்திரமுகி, பாலக்காட்டு மாதவன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இளம் ஹீரோக்களைச் சாடியுள்ளார். “கேரளாவில் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கின்றனர். ஆனால் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்குக் குறைவான தொகையை வழங்கி உள்ளனர். முன்னணி மலையாள நடிகர்கள் பயன்படுத்தும் கார்களின் விலை ரூ.4 கோடி. ஆனால் அவர்கள் வழங்கிய தொகை சில லட்சங்கள் என்பது வேதனையாக இருக்கிறது.

கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்குக் கொடுக்கின்றனர். அவர்களை ஒப்பிடும்போது நடிகர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்குக் கொடுக்க வேண்டாமா? உங்களுக்குப் பெயர், புகழ், பணம் எல்லாவற்றையும் கொடுத்தது ரசிகர்கள்தான். அவர்கள் கொடுத்த பணத்தில்தான் சொகுசாக வாழ்கிறீர்கள்.

இப்போது அந்த மக்கள் வீதியில் நிற்கும்போது நடிகர்கள் அதிக நிதி கொடுத்து உதவி செய்து அவர்கள் பக்கம் நிற்பதுதான் நியாயம். நட்சத்திர கலைவிழா நடத்தியும் நிதி திரட்டலாம்”என அவர் தெரிவித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share